பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
ந.சி. கந்தையா
1. பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
முன்னுரை
பெண்கள் ஆடவரை ஒப்ப எல்லா உரிமைகளும் உடையவர்களா யிருத்தல் வேண்டும் என்னும் கிளர்ச்சி எல்லாத் தேசங்களிலும் இன்று நடைபெறுகின்றது. “எண்ணற்றக்கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி என்பதெல்லாம் பெரும் பேதமைத்தே,” என்னும் பழைய கருத்துக்கு இன்று இடமில்லை. பெண்கள் விடுதலை யடைந்து வருகின்றவும், விடுதலை யடையத் திணறிக் கொண்டிருக்கின்றவும் இக் காலத்தில், பெண்களின் நிலை சமூகங்களில் எவ்வாறு இருந்து வந்த தென்பதைச் சரித்திர முறையில் பயில்தல் இன்பம் அளிப்பதாகும். உலகம் முழுமையிலும் பெண்களின் நிலை ஒரே வகையாக இருக்கவில்லை; பற்பலவாறு இருந்து வந்தது. ஆகவே பெண்களைப் பற்றிய வரலாற்றில் சிற்சில மாறுபாடுகள் காணப் படுவதும் இயல்பேயாகும். பெண்கள் ஆடவரின் கீழ் அடிமைப்பட்டு நீண்ட காலம் இருந்தமைக்குக் காரணம் பொருளாதார நிலைமையே. நாம் சில விலங்குகளை வீட்டில் வளர்த்து,அவற்றை உணவுக்காக நம்மையே எதிர் பார்த்திருக்கும்படி பழக்கி யுள்ளோம். அவ்வாறே பெண்களும் பழக்கப்பட்டார்கள். இன்று பொருள் வருவாயினால் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பெண்கள் விடுதலையடைந்துள்ளார்கள். ஏனையர் பழைய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பெண்கள் விடுதலை அடைவதற்கேற்ற வழி வகைகளைக் கோலுதற்குப் பெண் களைப் பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதது. இச் சிறிய நூல், “பெண்களின் இயற்கை சம்பந்தமானவும், சீர்திருத்த வளர்ச்சி சம்பந்தமானவும் வரலாறு”1 என்னும் ஒரு ஜெர்மன் நூலின் ஒருபகுதியின் சுருங்கிய கருத்தாகும்.
சென்னை
15.2.1948
ந.சி. கந்தையா
பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
தோற்றுவாய்
வரலாறுகளில் மிகமிக இன்பம் அளிப்பது பெண்ணைப் பற்றிய வரலாறே. ஆதிகாலம் முதல் பெண்களின் நிலை சமூகங்களில் எவ்வாறு இருந்தது? காலந்தோறும் அது எவ்வகை மாற்றங்களை அடைந்தது? ஆண் சமூகத்தினர் பெண் சமூகத்தினரை நடத்திய முறைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவா? ஏற்கத்தகாதனவா? பெண்கள் எவ்வாறு படிப்படியே திருத்தமடைந்து உயர்நிலை அடைந்தார்கள் என்பவை போன்ற பல செய்தி களை இன்றைய ஆடவரும் மகளிரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. பெண்கள் ஆடவரை ஒத்த விடுதலையுடையவர்களா யிருத்தல் வேண்டும் என்னும் உணர்ச்சி உலகம் முழுமையும் பரவியுள்ளது. அவ்வுணர்ச்சிக்கு எதிர்ப்புக்கள் நாளடைவில் ஓய்ந்து வருகின்றன.
மிக முற்காலத்தில் பெண்களின் நிலை
மனித சமூகத்தின் சீர்திருத்தத்தைப் பற்றிய வரலாறு பழைய உறை பனிக்காலத்திலிருந்து தொடங்குகின்றது. அக் காலத்தில் மக்கள் விலங்கு களோடு விலங்குகளாக வாழ்ந்தார்கள். அன்று முதல் பெண்ணுக்கும் ஆணுக்குமுள்ள சமூகத் தொடர்பு அறியக்கூடியதாக வுள்ளது. பழைய கற்கால மக்களின் எலும்புகளும், அம்மக்கள் எலும்புகளிலும் கற்களிலும் வரைந்த ஓவியங்களும் காணப்படுகின்றன. இவைகளைத் துணைக்கொண்டு அக்காலப் பெண்களைப்பற்றி முடிவாக எதையும் அறிய முடியாமல் இருக் கின்றது. இதுவரையும் கண்டு பிடிக்கப்பட்ட பழைய கற்கால மக்களின் எலும்புகளின் பெரும்பாலன ஆண்களுடையவே. சில சமயங்களில் மாத்திரம் பெண்கள் ஆண்களோடு வைத்துப் புதைக்கப்பட்டிருக்கின் றார்கள். இதனால், பழைய உறைபனிக் காலத்தில் ஆடவர் பெண்களை உயர்ந்தவராகக் கொள்ளவில்லை என்றும், மிக அருமையாகவே அவர்கள் பெண்களின் உடலைச் சிறப்பாகப் புதைத்தார்கள் என்றும் நாம் உய்த் தறியலாம்.
ஆடவனும் மகளும் ஒருங்கே புதைக்கப்பட்டுக் கிடந்தால், பெண் ஆணுக்கு ஒரு வகைப்பலியாகக் கொடுக்கப்பட்டவள், அல்லது அவள் அவனுக்கு மறுமையில் பயன்படும்படி மற்றைய பொருள்களைப் போல் இட்டுப் புதைக்கப்பட்டவள் என்றும் நாம் கருதலாம். உறைபனிக்கால மக்கள் உயிரின் அழிவின்மையை நம்பினார்கள். இன்றைய பிற்போக்கான மக்கள் மரணமென்பது உயிரின் மீண்டு வராத பயணம் என நினைப்பது போலவே அவர்களும் எண்ணிணார்கள். இறந்தவருடைய மறு உலகப் பயணத்துக்குத் துணையாக அவர் விரும்பிப் பயன்படுத்திய பொருள்கள் கொடுக்கப்பட்டன, அவை அணிகலன்கள், கல்லாயுதங்கள், அடிமைகள், பெண்கள் போல்வன.
இறந்த கணவனோடு மனைவியையும் கொன்று புதைத்தல்
சமீப காலத்துக்கு முன் இந்தியாவிற்போலவே ஜெர்மனியிலும் மனைவி, இறந்த கணவனோடு உடன் வைத்துப் புதைக்கப்பட்டாள். 1திராய் மக்கள் கணவனின் மிக விருப்பமான மனைவியைக் கொன்று அவனோடு புதைத்தார்கள். ஆப்பிரிக்க பசுடோஸ்2 மக்கள் கணவனைப் புதைக்கு மிடத்திலே மனைவியைத் தலைமீது தடியால் அடித்துக் கொன்றார்கள். தென்கடலிலுள்ள பியூஜித் தீவில் மனைவி திருகிக் கொல்லப்பட்டுக் கணவனோடு புதைக்கப்பட்டாள். இந் நிகழ்ச்சிகளால் முற்காலச் சமாதிகளில் ஆணும் பெண்ணும் புதைக்கப்பட்டிருக்கக் கண்டால் அவர்கள் நோயி னால் ஒரே காலத்தில் இறக்கவில்லையென்றும் மனைவி கொல்லப்பட்டுக் கணவனோடு புதைக்கப்பட்டாள் என்றும் நாம் உய்த்தறியலாம்.
உறை பனிக்கால மனிதன் மாற்றிக்கொள்ளவோ, கொன்று விடவோ கூடிய பொருளாக பெண்ணைக் கருதினான்.
பெண் ஆணின் உடைமை
பழைய மக்களின் நிலையை ஆராய்ந்து பார்க்கும்போது பெண் களின் நிலை மிகத் தாழ்வாக இருந்ததெனப் புலப்படுகின்றது. புதிய கற்கால ஓவியங்கள், ஆடவன் தனது இச்சைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற பொருளாகப் பெண்ணைக் கருதினான் என்று தெரிவிக்கின்றன. இது முற்கால மனிதன் செய்த சிற்பங்களில் பெண் உறுப்புக்களையே சிறப்பாகத் தோன்றும்படி அமைந்திருப்பதைக் கொண்டு அறியப்படுகின்றது.
ஆண் பெண் சேர்க்கையினால் கரு உண்டாகின்றதென மனிதன் அறிந்தது பிற்காலத்திலேயேயாகும். கரு உண்டாவதற்கும் குழந்தை பிறப்ப தற்கும் இடையேயுள்ள காலம் நீண்டதாயிருந்தமையின் அவன் இதைப் பற்றி அறியவில்லை. குறுகிய காலத்தில் குட்டியீனும் விலங்குகளை அக் காலத்தில் வளர்க்காமையால் அவன் இத்தொடர்பை அறிய முடியாமல் இருந்தது. இவ்வியற்கை விதியை அறியாத மக்கள் இன்றும் காணப்படு கின்றனர். ஆஸ்திரேலிய பழங்குடிகள் தம் முன்னோரின் ஆவிகள் விலங்கு வடிவில் பெண்ணின் வயிற்றில் நுழைவதால் கரு உண்டாகின்றதெனக் கருதினார்கள். குழந்தை, வயிற்றுனுள் அசையத்தொடங்கும் வரையில் அவள் தனது நிலையை அறிவதில்லை. இவ்வகை நம்பிக்கை நாகரிக மக்களிடையும், கிறித்துவ மதக்கொள்கையிலும் காணப்படுகின்றது. தாய்க்கும் குழந்தைக்குமுள்ள இவ்வகை உடல் சம்பந்தத்தை ஊன்றிக் கவனிப்பதால் கரு உண்டாவதன் வகை அறியப்பட்டது. இதனால் தாயாட்சி முறையான நாகரிகம் பழைய காலத்தில் உண்டாவதாயிற்று.
பெண்ணுக்குக் கடமைகள் இருந்தன;
உரிமைகள் இருக்கவில்லை
மனிதன் கீழ் நிலையில் இருந்த காலத்தில், பெண் ஒருவனால் விலை கொடுத்து வாங்கப்பட்ட வீட்டு விலங்கு அல்லது பொருள்போலக் கருதப் பட்டாள். அவள் புரிவதற்குக் கடமைகள் இருந்தன; உரிமைகள் இருக்க வில்லை. ஆடவன் தலைவனாயிருந்தான்; பெண் வேலை செய்பவளாயும் பிள்ளைகளைப் பெறுகின்றவளாயுமிருந்தாள். ஆஸ்திரேலிய பழங்குடி களுள் ஒருவன், பெண்ணைத் தான் விரும்பிய எவனுக்கேனும் கொடுக் கலாம். அவ்வாறு கொடுத்தலை விரும்பாவிட்டால் அவள் அடிக்கப்படு வாள்; அவ்வாறு அடிப்பதால் ஆபத்து விளைக்கும் காயங்கள் உண்டாவது முண்டு. இளம் வயதுடைய பெண் தளர்ந்த கிழவனுக்குக் கொடுக்கப்படினும் அவள் மீளுதல் முடியாது. அவள் அவனை விட்டு ஓடிச்சென்றால் அவள் மறுபடியும் ஓடமுடியாதபடி கால்கள் மர ஈட்டிகளால் குத்தப்பட்டன. பெண் சேர்க்கை தொடர்பான கருமங்கள் மிருகத்தன்மையாக நடைபெற்றன. சமூகம் அல்லது கூட்டத்திலுள்ள முதியவர்களே அது தொடர்பான முக்கிய பகுதியைக் கையாண்டனர். வயதானவர்கள் தமது முதிய மனைவியை வாலிபருக்குக் கொடுத்த போதும் அவ்வாலிபர்களுக்கு பெண் கிடைப்பது அருமையாகவிருந்தது. உற்சாகம் குன்றிய பெண்கள் மிகவும் துன்பத்துக் குள்ளானார்கள். இளம் பெண்ணை, அவளுக்கு முன்னமே மனைவியராயி ருக்கும் பெண்கள் கொடுமைப்படுத்தினர். அவள் தடிகளாலும் தோல்களா லும் குடிசை கட்டவேண்டும்; இராக் காலத்தில் குடிசைக்குமுன் நெருப்பு எரித்தற்கு விறகு பொறுக்க வேண்டும்; சிறிய விலங்குகளை வேட்டையாட வேண்டும்; கீரை வகைகளைச் சேகரிக்க வேண்டும்; கூரிய பாறைகளால் கிழங்குகளை அகழ்ந்து எடுக்கவேண்டும்; திரிகைக்கற்களில் (எந்திரக்கல்) தானியங்களை அரைக்க வேண்டும்; அரைத்த மாவைக் கொண்டு வந்து அப்பம் சுட வேண்டும்.
இவள் இவைகளைச் செய்யும்போது கணவன் வேட்டையாடு கின்றான்; தான் வேட்டையாடிப் பெற்ற விலங்குகளின் இறைச்சியை மற்றைய வேட்டையாடுவாரோடு பங்கு போட்டு உண்கின்றான்; உண்டபின் வீட்டிலுள்ள உணவின் தனது பாகத்தைப் பெற விரைந்து செல்கின்றான். அலைந்து திரியும் காலங்களில் ஆடவன் கையில் ஒரு ஈட்டியை மாத்திரம் கொண்டு செல்கின்றான். குடும்பத்துக்குள்ள மற்றைய எல்லாப் பொருள் களும் மனைவியரின் தோள்கள் மீது கட்டிச் சுமத்தப்படுகின்றன. நாலு அல்லது ஐந்து சுமைகளை ஒருத்தி கொண்டு செல்வது பொது நிகழ்ச்சி. குழந்தை அவள் தோள்மீது ஏறியிருந்தது அவள் சடையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். சில சமயங்களில் குழந்தையைத் தோல் பையிலிட்டுத் தோளில் தொங்கவிடுவாள்.
குழந்தைகளைக் கொல்லுதல்
ஆஸ்திரேலியரின் அலைந்து திரியும் வாழ்க்கைக்குக் கூட்டமான குழந்தைகள் தடையாயுள்ளன. ஆகவே குழந்தைகள் கொல்லப்பட்டன. வெள்ளையரின் சட்டம் நுழைய முடியாத இடங்களில் இன்றும் இவ் வழக்கம் நிலவுகின்றது. பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிட்டு இரண்டு நாய்க்குட்டிகளைப் பால் குடிக்கும்படி தாயின் மார்புகளில் விடுவது முண்டு. இதனால் அவர்களுக்குக் குழந்தையிலும் பார்க்க நாய்கள் எவ்வளவு அருமையுடையன என்று தெரிகின்றது.
பெண் வேலை புரியும் விலங்கு
திருந்தாத மக்கள் பெண்களை விலங்குகள் போல் நடத்தினார்கள். சமோயெத்திய1 பெண்கள் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்டார்கள். அவர் களிடையே பெண்களே எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். குடிசைகளையும் அவர்களே கட்ட வேண்டும்; அவைகளைப் பிடுங்க வேண்டியவர்களும் அவர்களே. அவர்களே சறுக்கி வண்டிகளைப் பூட்ட வும் கழற்றவும் வேண்டும்; அவற்றோடு தமது கணவருக்கு அடங்கி அடிமைபோல் வேலை செய்யவும் வேண்டும். மாலை நேரத்தில் உல்லாச மாகப் பொழுதுபோக்கும் நேரத்திலல்லாமல் ஆடவர் பெண்களோடு தயவாகப் பேசமாட்டார்கள். பெண்கள் அசுத்தமானவர்கள் எனவும் கருதப் பட்டார்கள். குடிசை கட்டி முடிந்தபின், அதனைக் கட்டிய அவளும் அவள் தொட்ட பொருள்களும் புகை காட்டிச் சுத்தம் செய்யப்படுதல் வேண்டும். சறுக்கி வண்டியில் பூட்டியிருக்கும் துவ மானை (reindeer) அவிழ்க்க வேண்டுமாயின் அவள் வண்டியின் கீழே தவழ்ந்து சென்று அவிழ்க்க வேண்டும். குடிசையின் ஒரு புறத்தில் கம்பு ஒன்று நடப்பட்டிருக்கும். அதைத் தாண்டிப் பெண்கள் செல்லுதல் ஆகாது.
வட அமெரிக்கப் புல்வெளிகளில் வாழும் மக்களிடையே, பெண்கள், மரந்தறிப்பவர்கள் தண்ணீர் சுமப்பவர்கள் என்று சொல்லப்படுவர். அம் மக்களிடையே வேலை செய்யும் பெண்கள் அடிமைகள் எனவே கருதப் படுவர். அவர்கள் பத்து அல்லது பன்னிரண்டு வயது அடைந்ததும், அவர் களின் விருப்பத்தைக் கேளாமலே தந்தை அவர்களை விற்றுவிடுவான். பெண்கள் பலவகையான வீட்டுக் கடமைகளையும் சமையலையும் செய்ய வேண்டும். மான் தோல் எருமைத் தோல்களைக் கூடாரங்களுக்குப் பயன் படுத்துவதற்கும், வெள்ளையருக்கு விற்பதற்கும், உடுப்பதற்கும் பதனிட வேண்டும். அவர்களே கூடாரத்தையும், குதிரைகள் இழுத்துச் செல்லும் சறுக்கி வண்டியையும் கழற்றி வைக்க வேண்டும். சில சமயங்களில் பெரிய துணிச் சுமைகளை முதுகிலும், குழந்தைகளை மார்பிலும் அல்லது தோளிலே தொங்கவிடப்பட்ட தொட்டிலிலும் இட்டுச் சுமந்து கொண்டு குதிரை களுக்குப் பின்னால் பல நாட்கள் நடந்து செல்ல வேண்டும். இராக்காலத்தில் பயணம் நின்றவுடன் அவள் தான் களையாறுவதைக் குறித்து நினையாது சமைக்க வேண்டும். பெண்கள் ஆண்களுடன் இருந்து ஒருபோதும் உணவு உண்ணமாட்டார்கள். ஆடவரின் கூத்து, களியாட்டங்களில் பெண்கள் பங்கு பெறுவதில்லை.
ஆப்பிரிக்க மக்களிடையே பெண்கள் எல்லா வகையிலும் அடிமை களாகக் கருதப்படுகிறார்கள். தட்டுமுட்டு அல்லது சுமை தூக்கும் விலங்கே பெண் ஆவாள். அவள் இளைத்துவிட்டால் அவள் இடத்துக்கு இன்னொருத்தி கொண்டுவரப்படுகிறாள். அவளை வாங்குமிடத்து ஒரு ஆட்டை விலை பேசி வாங்குவது போலவே அவள் வாங்கப்படுகிறாள். கணவன் மனை வியைத் துரத்திவிட விரும்பினால், அவன் அவள் கையில் வைக்கோலைக் கொடுக்கிறான்; சமாதானமாகப் போகவில்லையானால் அவள் வலுக்கட்டாய மாகத் துரத்தப்படுகிறாள்.
குரங்குகளிடையே ஆண் பெண்களின் வாழ்க்கை
மிக முற்காலத்தில் பெண்களின் நிலை மிகத் தாழ்வாகவே இருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் விலங்குக் கூட்டங்கள் போலவே வாழ்ந்தார்கள். உறைபனிக் காலத்தின் பின் மனிதன் விலங்கு நிலையி லிருந்து மேலான படிக்கு உயர்ந்தான். விலங்குகளுள் உணவுக்காகப் போராடவல்ல உயிரே நிலைபெற்றது. அவ்வகையினதே நன்றாக உண்டு நீண்டகாலம் வாழும். ஒரு கூட்டத்துக்குத் தலைமையாக இருப்பது வயதான மூத்த ஆண். இந் நிலைமையில் அதிகாரத்தால் உயர்ந்த மூத்த ஆணுக்கே எல்லாப் பெண்களிடத்தும் உரிமையுண்டு.
விலங்கு நூலார் காடுகளில் வாழும் கொரிலா என்னும் மேலினக் குரங்குகளின் சமூக வாழ்க்கையைப் பற்றிக் கவனித்துள்ளார்கள். உணவு தேடச் செல்லும்போது முன்னால் தலைமை வகிக்கும் குரங்கும், அதன் பின்னே இளங்குரங்குகளும், அவைகளின் பின் பெண் குரங்குகளும், இறுதியில் வயது முதிர்ந்த குரங்குகளும் செல்கின்றன. கூட்டத்தின் தலைவனாகிய குரங்கு மெல்லெனச் செல்கின்றது; இடையிடையே நிமிர்ந்து சுற்றுப் புறங்களைப் பார்க்கின்றது. ஆபத்து ஒன்றும் காணப்படாவிடில் அது மரத்தடியில் குந்தியிருக்கும். பெண் குரங்குகள் உணவு தேடி வந்து அதன் பாதங்களில் வைக்கும். இடையிடையே இரண்டு பெண் குரங்குகள் வந்து அதன் பக்கங்களில் இருக்கும். அப்பொழுது அக் குரங்குத் தலைவன் அவைகளின் தோள்கள் மீது கையைப் போட்டு அவைகளோடு கேளிக்கை செய்யும். அது செய்யும் ஓசையைக் கவனித்துப் பார்த்தால் அது சிரிக்கின்ற தெனக் கூறலாம். ஆபத்தை அறிந்தால் அது உள்ளங்கையை விரித்துக் கன்னங்களில் அடித்துக் கொண்டு உரக்கச் சத்தமிடும். உடனே குரங்குக் கூட்டம் ஓடி மறைந்துவிடும். தலைவன் குரங்கு எதிரியைக் கண்டவுடன் கையைப் பொத்தி மார்பில் அறைந்து எதிரிமீது மூர்க்கமாகப் பாய்கின்றது.
ஜெர்மன் வேட்டைக்காரன் ஒருவன் குரங்குக் கூட்டம் ஒன்றைப் பார்த்தான். குட்டிகளும் பெண் குரங்குகளும் ஆண் குரங்குகளுக்கு உணவு தேடிக்கொண்டிருந்தன. அவைகளுள் ஒன்று சுறுசுறுப்பில்லா திருந்தபோதும், அதிக உணவை உண்டபோதும் ஆண் அதன் காதுகளில் அறைந்து உறுமிச் சத்தமிட்டது.
கொரிலாக் குரங்குகள் இடம்விட்டு இடம் செல்லும்போது தாங்களும் தங்கள் குட்டிகளும் தங்குவதற்குப் பெண் குரங்குகளே மரத்தில் கூடு கட்டிக் கொள்கின்றன. சில சமயங்களில் அவை கூடுகளை நிலத்தில் அல்லது நேரிய கால் உடைய மரத்தின் பத்து அல்லது பதினெட்டடடி உயரமுள்ள கிளைகளில் கட்டுகின்றன. ஆண் கொரிலா தனது கூட்டத்தைத் தாக்கவரும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தமாக மர அடியில் கிடக்கும்.
முதுமை ஏறஏறத் தலைவனின் பலம் குறைகின்றது. இன்னொரு ஆண் அதன் இடத்தை ஏற்க விரும்புகின்றது. பின்பு இரு குரங்குகளுக்கு மிடையில் கடும்போர் மூள்கின்றது. வெற்றியடைந்ததே குட்டிகளுக்கும் பெண் குரங்களுக்கும் தலைவன் ஆகின்றது. தோல்வியடைந்தது காடு களில் தனிமையாக வாழ்கின்றது.
ஆண் பெண்களின் கடமைகளில் வேறுபாடு
கொரிலாக்களிடையே காணப்பட்ட இவ்வகை வாழ்க்கையை நாம் இன்றும் மிகமிகத் தாழ்நிலையிலுள்ள மக்களிடையும் காணலாம். மக்களின் உடலமைப்பும் பற்களும் தாவரம், ஊன் என்னும் இருவகை உணவுகளை யும் கொள்வதற்கேற்றவை. ஆகவே மிக முற்காலத்தில் உணவு தேடும் வேலைகளில் ஆண் பெண் என்னும் இருபாலினருக்குமிடையில் பிரிவு உண்டாயிருத்தல் வேண்டும்.
ஆண்கள் வேட்டை ஆடிப்பெற்ற ஊன் உணவையும், பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்த வேட்டையாடமாட்டாதவர் என்போர் பழங்கள் கிழங்குகள் போன்றவைகளையும் தேடினார்கள். ஆடவர் தாம் வேட்டை யாடிய உணவைத் தாமே வேட்டையாடிய இடத்தில் பச்சையாக உண் டார்கள்; உறைவிடத்துக்குச் சென்று பெண்கள் சேகரித்த தாவர உணவின் பங்கையும் பெற்றனர். இறைச்சியைப் பக்குவஞ் செய்து வைப்பது எப்படி என்று அறியாத பழங்காலத்தில் ஊன் உணவு அதிகம் கிடைத்தமையால் ஆண்களும் பெண்களும் உணவுப் பொருள்களை மாற்றிக் கொண்டார்கள். இது ஆண் பெண் என்னும் இருபாலாரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட விருப்பினாலும், இரக்கம், தருமம் என்னும் உணர்ச்சிகளினாலும் நடைபெற்றதாகலாம்.
ஆடவனுக்குத் தாவர உணவு வேண்டியிருந்தது. இதனை அவன் பெண்ணிடமிருந்து பெற்றான். இதனால் ஆடவருக்கும் மகளிருக்குமிடை யில் ஒருவகைத் தொடர்பு உண்டாயிற்று. இத் தொடர்பு பெண்ணுக்கு வாய்ப் புடையதாயிருந்தது. மனிதன் நெருப்பை உண்டாக்க அறிந்து அதனை அணைந்து போகாதபடி காப்பாற்ற வேண்டிய போது இவ்வாய்ப்பு மேலும் பலமடைந்தது.
நெருப்பை அறிந்தபின் நேர்ந்த மாற்றம்
உறைபனிக் கால மனிதன் குளிர்காயவும், அக் காலத்தில் நடமாடிய பெரிய காட்டு விலங்குகள் தம்மை தாக்குவதினின்று பிழைக்கவும், இறைச்சியைச் சுடவும் நெருப்பைப் பயன்படுத்தினான். முற்காலத்தில் நெருப்பை அணையாதபடி பாதுகாத்தல் பெண்ணின் கடமையாக விருந்தது. வேட்டை ஆடிச் செல்லும் ஆடவன் நெருப்பையும் உடன் கொண்டு செல்லுதல் ஆபத்தாயும், முடியாததாயும் இருந்தது. பெண்கள் நெருப்பை ஓரிடத்தில் வைத்துக்காக்க வேண்டியிருந்தமையின் உறை விடங்களை அடிக்கடி மாற்றுதல் முடியாதிருந்தது. முற்காலத்தில் ஆடவன் பெண்ணிடத்தில் கொண்ட கவர்ச்சியினால் உறைவிடத்துக்குச் சென்றான்; பின்பு இடையிடையே வந்து போனான்.
முற்காலத்தில் குறிக்கப்பட்ட சில காலத்திலேயே ஆடவன் பெண்ணின் தோழமையுடையவனாயிருந்தான். இப்பொழுது அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் எப்பொழுதும் சென்றான். அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் தங்கியிருந்தான். அவன் தான் வேட்டையாடிப் பெற்ற ஊன் உணவைச் சமைத்து உண்ணும் பொருட்டு உறைவிடத்துக்கு வந்தான். தான் செய்யும் வேலைக்காக உணவில் ஒரு பங்கைக் கேட்கக் கூடிய உயர்நிலையைப் பெண் அடைந்தாள். இது பெண்ணின் நிலை மையைச் சிறிது உயர்த்திற்று. பழைய உரோமில் பரிசுத்த நெருப்பை அணை யாமல் காப்பதற்குக் கன்னிப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள்.
நெருப்பை உண்டாக்க அறிந்தபின் நேர்ந்த மாற்றம்
மனிதன் வேண்டியபோது நெருப்பை உண்டாக்க அறிந்தான். அப் பொழுது அவன் மறுபடியும் அலைந்து திரிபவன் ஆயினான். இப்பொழுது பெண் சமைக்கும் பானை சட்டிகளைச் செய்ய அறிந்தாள். அதனால் உணவு முறையில் சில திருத்தம் உண்டாயிற்று. பெண்கள் செய்யக் கண்டுபிடித்த பானை சட்டியே ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரம் செய்வதற்கும் ஏதுவா யிருந்தது. பானை சட்டி செய்ய அறிந்திருந்தமையால் தான் முற்காலப் பெண்கள் ஆடவரைப் பணியச் செய்தார்கள். பெண்கள் தமது ஊக்கத்தைப் பல வழிகளில் செலுத்தினார்கள். பெண்களே முதலில் வாணிகத்தையும், கைத்தொழில்களையும் புரிந்து தமது அதிகாரத்தைப் பரப்பினார்கள்.
பெண்களின் தொழிலை ஆண்கள் கைப்பற்றுதல்
பழங்களைப் பொறுக்குவதும், கிழங்குகளை அகழ்வதும், தானிய வகைகளை ஒழுங்காக விளைவிப்பதற்கு வழி காட்டின. இதிலிருந்து ஒழுங் கான தாவர உணவு பெறுவதற்கு ஏதுவாகிய முற்கால வேளாண்மை தொடங் கிற்று. இன்றும் கீழ்நிலையிலுள்ள சமூகங்களில் பெண்கள் பாறையினாலும், வளைவு தடியினாலும் நிலத்தைக் கிளறிப் பயிடுகின்றார்கள். ஆதிகாலம் முதல் பெண்களே நெசவு செய்தல், பாய், கூடை முடைதல் முதலிய வேலை களையும் செய்து வந்தார்கள். கம்பளி கொடுக்கும் விலங்குகள் வளர்க்கப் படாத காலத்தில் தாவர வகைகளிலிருந்து நார் எடுத்து ஆடைகள் நெய்யப்பட்டன. சுவிற்சர்லாந்து வாவிகளில் உறைந்த மக்கள் (கி.மு.5,000) சணலினாலும் கம்பளியினாலும் செய்து உடுத்த துணிகளின் துண்டுகள் கிடைத்துள்ளன. பழைய மக்களுள் ஆண்களும் பெண்களும் ஓர் ஓர் இடங்களில் ஆடை நெய்தார்கள் என அறிகின்றோம். பற்பல காரணங்களி னால் ஆடவர் பெண்களுக்குரிய வேலைகளைத் தாம் கைப்பற்றிக் கொண்டு, அவர்கள் மீது ஆண்களுக்குரியனவும், மிகக் கீழ்மையானவும் உள்ள வேலைகளைச் சுமத்தினார்கள் எனத் தெரிகின்றது. ஜெர்மனியில், பானை சட்டி வனைவோரும் ஆடை நெய்வோரும் மத்திய காலம் வரை யில் தாழ்ந்தவர்களாகக் கொள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் அத் தொழில்கள் பெண்களுக்கு உரியனவாயிருந்தனவேயாகும். தையல் வேலை செய்வோர் பெண் தன்மையுள்ளவர்களாகவும், பரிகசிக்கத்தக்கவர் களாகவும் நீண்ட காலம் கருதப்படலாயினர்.
தாய் அதிகாரத்தின் தொடக்கம்
முற்கால மனிதன் ஆண் பெண் சேர்க்கையினால் குழந்தை பிறக்கின்றது என அறியத் தொடங்கிய பின் தாயாட்சி முறையான சமூக வளர்ச்சி உண்டாயிற்று. முற்காலத்தில் கூட்டு மணங்கள் சமூகங்களுக்குள் இருந்தன. இதனால் தந்தைக்கும் பிள்ளைக்கும் உறவு உண்டாகவில்லை. தாய்க்கும் பிள்ளைகளுக்கும் மாத்திரம் உண்மையான இரத்த உறவு உண்டாகி யிருந்தது. தாய் குழந்தைக்கு நீண்டகாலம் பால் ஊட்டி வளர்த்தாள். அதனால் அவளுக்கும் பிள்ளைக்கும் நீண்ட தொடர்பு உண்டாயிருந்தது. நாகரிக மடைந்த மக்களிடையே உள்ள தாயிலும் பார்க்கப் பிற்போக்கான மக்க ளிடையே உள்ள தாய், தன் குழந்தைக்கு நீண்ட காலம் பால் ஊட்டி வளர்க் கிறாள். சாதாரண காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள், ஆஸ்திரேலிய தாய் ஆறு ஆண்டுகள் குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்கிறாள். வட அமெரிக்க பெண்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வரையும் குழந்தைக்குப் பால் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு தாய்க்கும் குழந்தைக்கும் உண்டான தொடர்பினால் தாயன்பு அதிகம் வளர்ந்தது. இவ்வாறு அமைந்த சமூகத்தில் தந்தை அன்னிய னாகக் கருதப்பட்டான்; இரத்த உறவு உடையவனாகக் கருதப்படவில்லை. பெண்ணுக்கு அதிகாரம் உண்டாயிற்று. வளர்ந்த புதல்வர் குடும்பத்தைப் பாதுகாப்போராகவிருந்தனர்; புதல்வியர் பெண்களுக்குரிய கடமைகளில் உதவி புரிவோராயிருந்தனர்.
இந் நிலைமையினால் தோன்றிய தாயாட்சியே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா முதலிய நாடுகளின் பழங்குடி களிடையே நிலைத்துள்ளன. பழைய நாகரிக மக்களிடையே தாயாட்சி முறை இருந்தது. பாபிலோனிய ஆவணங்களில் “தாயும் தந்தையும்”, “மனைவியும் கணவனும்” என்பன போலப் பெண்ணின் பெயரே முதலிற் கூறப்படுகின்றது. மனிதன் நாகரிகமடைந்திருந்த காலத்திலும் தாயாட்சி முறை அசைக்க முடியாத படி வலிமையடைந்திருந்ததெனத் தெரிகின்றது. பாபிலோனியப் பெண்கள் ஆண்களை ஒத்த உரிமை பெற்றிருந்தார்கள் என்பதைப் பட்டையங்கள் வழியாக அறிகின்றோம். ஹமுராபி காலத்தில் (கி.மு.2,250) பெண்கள் கோவில்களில் குருமாராகவிருந்தார்கள். ஆவணங்களில் பெண்கள் சாட்சிகளாகவும் கையெழுத்திட்டார்கள்.
எகிப்திய ஆவணங்களில் இன்ன தாயின் மகன் என்றே பெரும் பாலும் காணப்படுகின்றது. தந்தையின் பெயர் அருமையாக ஓரோரிடத்திற் காணப்படுகின்றது. கிரேக்கர் எகிப்தை வெற்றி கொண்ட காலத்தில் எகிப்தியர் தாய் வழியாலேயே அறியப்பட்டார்கள். பின்பு சிறிது சிறியதாகத் தாயின் பெயருக்குப் பதில் தந்தையின் பெயர் இடம் பெற்றது. பழைய ஓவிய எழுத்துக்களில் தாய், வீட்டுக்காரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளாள்.” அருமை யான தலைவி” அல்லது “உனது கணவனின் அன்புக்குரிய இல்லாள்” என்று கணவன் அவளை அழைத்தான். “எகிப்தில் பெண்கள் கடைத்தெரு வுக்குப் போய் கொள்வனவு விற்பனவுகளைச் செய்கிறார்கள். ஆண்கள் வீட்டிலிருந்து துணி நெய்கிறார்கள். புதல்வருக்குப் பெற்றோரை ஆதரிக்க வேண்டிய கடமை இல்லை; புதல்விக்கே அக் கடமை உண்டு” என எரதோதசு என்னும் பழைய கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். ஏரதோதசுக்கு (கி.மு. 480) நானூறு ஆண்டுகள் பின் வாழ்ந்த தயதோரஸ் இக் கூற்றினை வலியுறுத்தி, அரசனிலும் பார்க்க அரசிக்குக் கூடிய அதிகாரம் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். திருமண உடன்படிக்கையில் கணவன் மனைவிக்குக் கீழ்ப்படிவதாக வாக்களித்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். எகிப்திய பெண்களின் சொத்து அவர்கள் அதிகாரத்துக்குட் பட்டு இருந்தது. அவர்கள் அதனைத் தமது எண்ணப்படி எவ்வாறு வேண்டினும் செய்து கொள்ளலாம்.
எகிப்திலே அரசர் முதல் எல்லா மக்களிடையும் சகோதரன் சகோதரியை மணக்கும் வழக்கம் தோன்றி வளர்ந்திருந்தது. இரண்டாம் தாலமி (கி.மு.285-247) என்னும் எகிப்திய அரசன் பிலாடல்போஸ் எனத் தனக்கு மறு பெயர் வைத்துக் கொண்டான். பிலாடல்போஸ் என்பதற்கு சகோதரியைக் காதலிக்கின்றவன் என்பது பொருள். பழைய வழக்கத்தைப் பின்பற்றி அவன் ஆர்சினோ என்னும் தனது சகோதரியை மணந்தான். எகிப்து பல சிற்றரசர் நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறிய நாட்டையும் ஒவ்வொரு அரசன் ஆண்டான். அவ்வரசனுக்கு ஆட்சி யுரிமை தந்தை வழியாலன்றித் தாய் வழியாகவே வந்தது. அது இன்று திருவிதாங்கூரில் நடைமுறையிலுள்ள மருமக்கள் தாயத்தை ஒத்தது. எதியோப்பியரின் அரசுரிமை அரசனின் பிள்ளைகளை அடையாமல் அவனுடைய சகோதரியின் பிள்ளைகளை அடைந்தது என்று நிக்கோலஸ் என்னும் பழைய வரலாற்றாசிரியர் கூறியுள்ளார்.
சரித்திரகாலம் வரையில் தாயாட்சி எம்மட்டும் சமூகங்களில் வலிமை பெற்றிருந்ததென்பதை விளக்குவதற்குத் தாயாட்சியைக் குறித்துக் கூறியுள்ளோம். வரவர அதிகாரத்தால் வளர்ந்து வந்த ஆடவர் பெண்களை நியாயமாக நடத்தத் தவறினார்கள் எனக் கூறமுடியாது.
ஆடவன் பல பெண்களை மணத்தல்
எகிப்திலே செல்வந்தனாயுள்ளவன் தான் விரும்பிய அத்தனை பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்திருந்தான். ஆனால் அவனுடைய முறையான மனைவியே வீட்டின் தலைவி எனப்பட்டாள். அரண்மனை களில் ‘பெண்களின் வீடு’ எனப்பட்ட தனிமையான ஒரு இடம் இருந்தது. பைபிலஸ் ஏடு ஒன்றில், வைப்பாட்டிகளின் மேற்கொண்ட காதலால் தன் மீது பற்று ஒழிந்த அரசனைப் பற்றிக் கூறிய இராணி யொருத்தியின் வாக்கியங்கள் காணப்படுகின்றன.
வியபிசாரக் குற்றமும் தண்டனையும்
பெண்ணை விலைக்கு வாங்கி அல்லது திருடிச் சொந்தமாக்கிய போதும் வியபிசாரம் மனிதனுக்குக் கௌரவக் குறைவானது என்று கொள்ளப் பட்டது. எல்லா நாடுகளிலும் கீழ் நிலையிலுள்ள மக்களிடையே பெண்கள் வியபிசாரத்திற்குத் தண்டிக்கப்படுகிறார்கள்; ஆண் சிறிதேனும் தண்டனை அடைவதில்லை. பெண்ணை அவளுடைய பெற்றோரிடம் போக்கி அவர்களிடமிருந்து பெண்ணுக்கு விலையாகக் கொடுத்த பொருளைப் பெற்றுக் கொள்ளுதல், பெண்ணின் அவயவங்களை வெட்டுதல், அல்லது அவளைக் கொலை செய்தல், போல்வன வியபிசாரக் குற்றத்துக்குப் பெண் அடைந்த தண்டனைகளாகும். சில சமயங்களில் வியபிசாரக் குற்றஞ் சாட்டப்பட்டவன் நட்ட ஈடு கொடுக்க வேண்டியிருந்தது; சில சமயம் கொலைத் தண்டனையும் பெற்றான். எகிப்தில் வியபிசாரக் குற்றத்துக்குட் பட்ட பெண்களின் மூக்கு அறுக்கப்பட்டது. அபாசி (Apache) என்னும் அமெரிக்கரிடையே இவ்வழக்கு இன்றும் நடைபெறுகின்றது. மூக்கு அறுக்கப்படாவிட்டால் அவள் உயிரோடு புதைக்கப்பட்டாள். குற்றத்துக் குள்ளானவன் அடிக்கப்பட்டான்.
பெண்கள் ஆண்களைக் கவருதற்குத் தம்மை அலங்கரித்தல்
எகிப்திய பெண்கள் ஆடவரை வசீகரப்படுத்துவதற்குத் தம்மை எவ்வளவு அலங்கரிக்க முடியுமோ அவ்வளவுக்கு அலங்கரித்துக் கொண்டார்கள். அவர்கள் பலவகை மேனிமினுக்குப் பொருள்கள், மணப் பொருள்கள், சாயங்கள், உடை அலங்காரங்கள் போன்றவைகளைப் பயன் படுத்தினர். தாயாட்சி வலியடைந்திருந்தபோதும் ஆடவன் எவ்வாறு சமூகத்தில் தன்னை உயர்வாக வைக்க முடிந்தது என்பதை இவை விளக்குகின்றன. பதாஹோதெப் (Path-hotep கி.மு.3,350) என்னும் அரசன் பெண்களை ஆடவருக்குப் பின்வருமாறு புத்திமதி கூறியுள்ளான். “நீ புத்திமானாயின் உனது மனைவியிடம் அன்பாயிரு; அவளுக்கு நல்ல உணவு கொடு; அவளை அழகாக உடுக்கும் படி செய்; அவளுக்கு மணப் பொருள்களை வாங்கிக் கொடு. இன்னும் அவளுக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடியவைகளை நீ இருக்குமட்டும் செய். அவள் தன்னையுடையவனின் தகுதிக்கேற்றவளாய் வாழ வேண்டும். நீ அவளிடம் கொடுமையாக நடவாதே. முரட்டுத்தனமான அதிகாரத்திலும் பார்க்க அன்பு நன்மைகளைச் செய்கின்றது. முகக்கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போது அவள் மகிழ்ச்சியடைவாள். அவள் மகிழ்ச்சியோடு உனது வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை விரும்பிச் செய்வாள்.” இதனால், பெண்ணின் அதிகாரத்துக் குடைய தாயாட்சி நீண்ட காலம் நடைபெற்று வந்தபோதும் அது காலத்தில் குறையத் தொடங்கி விட்டதெனத் தெரிகின்றது.
யூதரிடையே தாயாட்சி முறை
கிறித்துவ வேத காலத்தில் யூதரிடையே தாயாட்சி முறை இருந்ததெனக் காண்கின்றோம். கிறித்துவ வேதத்தில் அரசரைப் பற்றிய புத்தகத்தில் அரசனின் பெயரோடு தாயின் பெயர் இணைக்கப்பட்டிருக் கின்றது. அரச சபையில் அரசனின் தாய்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. “ஆகவே ஒருவன் தனது தாயையும் தந்தையையும் விட்டுத் தனது மனைவியோடு சேர்ந்து இருவரும் ஒருவராவார்களா?” (ஆதி ஆகமம் 11-24) எனக் கிறித்துவ வேதத்தின் பல விடங்களிற் கூறப்படுகின்றது. இதி னுடைய பொருள், ஒருத்தன் ஒரு பெண்ணை மணந்து தாயாட்சி வழக்கப் படி அவள் குடும்பத்தைச் சேர்ந்தவனாவான் என்பதே.
புல்வெளிகளில் வாழ்ந்த எபிரேய மக்களிடையே தாயாட்சி முன்னமே மறைந்து போயிற்று. ஆடு மாடு வளர்த்து அலைந்து திரியும் மக்களின் வாழ்க்கைக்கும் பயிரிட்டு ஓர் இடத்தில் தங்கியிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு.
தந்தையின் அதிகாரம்
வேட்டையாடும், ஆடவரே தொடக்கத்தில் விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வளர்த்தார்கள். புல்வெளிகளில் மேய்ந்து மனிதரின் கவனிப்புக்குட்படாது பெருகும் ஆடுமாடுகளின் கூட்டங்களுக்கும் ஆடவரே தலைவராகவிருந்தனர். மந்தைகள் பால், இறைச்சி முதலிய உணவுகளையும், தோல், கம்பளி முதலிய உடைகளையும் கொடுத்தன. இதனால் அவை மிகவும் மதிப்புக்குரிய சொத்தாகப்பெருகின. ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளை அதிகமாக வைத்திருப்பதால் அவைகளின் சொந்தக்காரன் புதிய மேய்ச்சல் நிலத்தைத் தேட வேண்டியிருந்தது. ஆகவே அவன் தனது உறைவிடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தது. பெரிய ஆடு மாடுகளின் கூட்டங்களைப் பாதுகாப்பதற்கு அவனுக்கு வேட்டை யாடுதல், போர் செய்தல்களிற் பயிற்சியுள்ள உதவியாளர் தேவைப்பட்டனர். ஆகவே அவன் அடிமைகளைப் பெறும் அவசியம் உண்டாயிற்று. அடிமை களைப் பெற்றதும் அவன் தனது புதல்வர்களுக்கு மந்தை மேய்க்கும் பயிற்சியளித்து மந்தையை அவர்கள் கவனிக்கும்படி செய்தான். ஆப்பிரிக்காவிலே ஆடுமாடுகளை வளர்க்கும் கூட்டத்தினரிடையே அவை விடப்பட்டிருக்கும் பட்டிக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள். அவைகளை மேய்ப்பது, பால்கறப்பது எல்லாம் ஆடவரால் செய்யப்படுகின்றன.
பெண்களுக்கும் ஆண்களுக்குமுள்ள சமூகத் தொடர்பை பொருளா தாரத் தொடர்பான மாற்றங்களும் வேறுபடுத்தியுள்ளன. தாய் வழியிலிருந்து உரிமை உண்டாவதற்குப் பதில் தந்தை ஆட்சி உண்டாயிற்று. மந்தைக் குரியவனே தன்னை உணவுக்கு எதிர்பார்க்கும் குடும்பத்தின் மற்றையவர் களுக்கெல்லாம் தலைவனானான். அவனுக்குத் துணை புரிவதற்குப் பல ஆட்களின் உதவி வேண்டியிருந்தது. ஆகவே அவனுக்குப் பல குழந்தை களைப் பெறுவதற்குப் பல பெண்கள் தேவைப்பட்டார்கள்.
பாபிலோனிலும் எகிப்திலும் பெண்கள் சம்பந்தமான மாற்றம் உண்டாகத் தொடங்கியிருந்தன. பிற்காலத்தில் ஓரிடத்தில் தங்கியிருந்த எபிரேயரிடையே மேலும் தாயாட்சி விழுகையடைவதாயிற்று. கிறித்துவ மறையின் பழைய ஏற்பாட்டில் ஆண் குழந்தை பிறந்தால் யேகோவாக் கடவுளுக்கு நன்றி செலுத்துவது போலப் பெண் குழந்தை பிறந்தால் நன்றி செலுத்தும் வாக்கியங்கள் காணப்படவில்லை. பெண்கள் பெற்றோர் களுடைய சொத்தாயிருந்தது பின்பு கணவனின் சொத்து ஆனார்கள். பெண் விலை மதிப்புள்ள வேலையாளாயிருந்தாள். அவள் மிகக் கடுமையான வீட்டு வேலைகளைச் செய்தாள். அவள் அடிமைபோல் வேலை செய்தது மாத்திரமல்லாமல் அவளிடம் தான் உரிமை பாராட்டக்கூடிய சொத்து எதுவும் இருக்கவில்லை. பாபிலோனியரால் சிறை பிடிக்கப்படும் காலம் வரையில் ஆண்கள் பல பெண்களை மணந்தார்கள். ஆடவன் பெண்ணை விலை கொடுத்து வாங்கினான், சொத்து ஆண் வழியைச் சேர்ந்தது. ஆண் சந்ததி இல்லாவிடில் சொத்துப் பெண்ணைச் சேர்ந்தது; ஆனால் அவள் அக் குடும்பத்தில் மாத்திரம் கணவனைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும், பெண்ணின் கடமை பிள்ளைகளைப் பெறுவதும் வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ளுவதுமே என்று கருதப்பட்டது.
இலக்கிய கால மக்களை நாம் நோக்கும்போது எரதோதசு கூறி யிருக்கும் ஒரு நிகழ்ச்சி இதற்கு மாறாகக் காணப்படுகின்றது. சின்ன ஆசியா வின் தென்மேற்கு மூலையிற் குடியேறியிருந்தவர்களும், கிரேத்தா (Crete) வினின்று வந்தவர்கள் எனப்பட்டவர்களுமாகிய இலைசியரிடையே பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டனர். ஒருவனை நோக்கி அவன் குடும்ப வழியை வினாவினால் அவன் தனது தாய் அல்லது தாயின்தாய் பெயரைக் கூறுவான். பெண், அடிமை ஒருவனைச் சேர்ந்து பிள்ளையைப் பெற்றால் பிள்ளை முறைமையானதாகக் கொள்ளப்பட்டது. ஆண், அடிமைப் பெண்ணைச் சேர்வதால் பிறந்த பிள்ளைகள் அடிமைகளாகவும் முறைகேடாகப் பிறந்தனவாகவும் கொள்ளப்பட்டன. சொத்து தாயிட மிருந்து மகளை அடைந்தது; மகனை அடையவில்லை.
கிரேக்க நாகரிகத்தின் முன்முறையில் நாம் தாயாட்சியைக் காண் கின்றோம். இவ்வடையாளங்கள் பழங்கதைகளிலேயே காணப்படுகின்றன. அதேனிய சட்டம் தந்தை வழியிலுள்ள (தந்தையின் சகோதரனின் பெண் ணாகிய) சகோதரியை மணக்க அனுமதிக்கின்றது; ஆனால் தாய் வழியில் இவ்வாறு மணக்கும் படி அனுமதிக்கவில்லை. பழைய கிரேக்கரிடத்தில் காதல் என்பது இன்றைய கீழ் நிலையிலுள்ள மக்களிடையே காணப்படும் காதலைப் பற்றிய கருத்தைவிட வேறாக இருக்கவில்லை. கன்னிப் பெண்கள் பெண்களுக்கு விடப்பட்டுள்ள அறைகளிலிருந்து வளர்ந் தார்கள், பெண் மணப்பருவம் அடைந்ததும் பெற்றோர் மணமகனைத் தேடி அவனிடத்தில் அவளைக் கொடுத்தார்கள். அவள் கணவனின் வீட்டுக்குச் சென்று அங்குப் பெண்கள் இருக்கும் அறையில் வாழ்ந்தாள். அவள் கல்வி யறிவில்லாதிருந்தாள்; அவளுக்குப் பெண்களுக்குரிய தையல் வேலை மாத்திரம் தெரியும். அவள் வெளியே செல்லவும் ஆடவரோடு பழகவும் மன வளர்ச்சிக்குரியவைகளை அறியவும் முடியாமல் இருந்தாள்.
பிற்காலத்தில் ஆட்சி முறைகளில் மாற்றம் உண்டான போது கிரேக்கப் பெண்களின் நிலை இன்னும் மோசமடைந்தது. மனைவியிருக் கும் அறையைக் காவல் காப்பதற்கு அடிமைப் பெண் ஒருத்தி நியமிக்கப் பட்டாள். மனைவியிருக்கும் அறையை அடைத்துத் தாள் இட்டு அவளைக் காவல் காப்பதே நல்ல முறை என்று கணவன் கருதினான். பழைய தத்துவ சாத்திரிகள், பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களல்லர் எனக் கருதி னார்கள். ஆகவே சட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பானவை எவையும் இருக்கவில்லை. கிரீசிலே ஸ்பாட்டிய, டோரியப் பெண்கள் விடுதலை யடைந்திருந்தார்கள் எனச் சிலர் கூறுவதுண்டு. இக் கருத்துத் தவறுடையது. ஸ்பாட்டிய, டோரியப் பெண்கள் வெளியே சென்று விளையாட்டுகளிலும் மல்யுத்தங்களிலும் கலந்து கொள்ளும்படியும் விடப்பட்டார்கள். இது அவர்கள் உடல் நலம் பெற்று நல்ல குழந்தைகளைப் பெறும் பொருட்டும், ஆடவரின் நன்மையைக் கருதியும் அனுமதிக்கப்பட்ட வழக்கமேயாகும்.
அக் காலத்தில் கிரீசில் இன்னொரு வகையாகப் பெண்கள் முன்னுக்கு வந்தார்கள். இவர்கள் பரத்தையராவர் (Hetairai). இவர்கள் ஆடவரின் கவர்ச்சிக்குடையவர்களாயிருந்தனர். வீட்டு மனைவியர்களிலும் பார்க்க இவர்களுக்கு உலக நடையும், கல்வியும், ஆடவரை வசியப் படுத்தும் தன்மையும், நல்ல பழக்கங்களும் தெரியும். கிரேக்கக் கணவர்கள் இவர்களையே சுற்றித் திரிந்தனர். சாகிராட்ஸ், அரிஸ்டோட்டில் முதலிய தத்துவ ஞானிகளும் இவர்களின் கவர்ச்சிக்குட்பட்டிருந்தனர். வீட்டுக்காரி எனப்பட்ட பெண் இவ்வாறு பரத்தையைச் சுற்றித்திரியும் கணவனைக் கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். அப் பரத்தையை வீட்டுக்குக் கொண்டு வராத அளவில் அவள் அவ்வாறு செய்தல் முடியாது. பெரிக்கிளிஸ் (Pericles) இவ்வாறு செய்தமையால் கலியாண நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஐம்பது வயதுடையவராயும், வளர்ந்த மக்களை உடையவராயும் இருந்தபோதும் அஸ்பேசியா (Aspesia) என்னும் பரத்தையை மணந்தார். டெமொஸ்தீனிஸ் என்னும் கிரேக்கர் கூறியிருப்பது வருமாறு: “நாங்கள் எங்களுடைய தேவைகளுக்கும் ஊழியத்துக்குமாக வைப்பாட்டிகளை (அடிமைகளை) வைத்திருக்கிறோம்; எங்கள் காதலுக்கும் இன்பத்துக்கு மாகப் பரத்தையர் இருக்கிறார்கள்; வீட்டைக் கவனிக்க மனைவியர் இருக்கிறார்கள்.”
1
பரத்தைமை
முறைமையான தொடர்பு இல்லாத ஆடவரோடு சேர்க்கை வைத் திருக்கும் பெண் பரத்தை எனப்படுவாள். ஆடவனின் இயல்பான தன்மை ஒரு பெண்ணை மணப்பதன்று. திருமணங்கள் ஒழுக்க சம்பந்தத்திலும் பார்க்கப் பொருளாதார சம்பந்தமுடையன. முற்காலத்தில் பலவான் அல்லது செல்வவான், தான் விரும்பிய அத்தனை பெண்களைக் கொள்ளையினால் அகப்படுத்தி அல்லது விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கலாம். கீழ் நிலையிலுள்ள மக்களிடையே இன்றும் இம்முறை காணப்படுகின்றது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்படும் சாலமன் அரசனிடத் தில் மனைவியரும் வைப்பாட்டிகளுமாக ஆயிரம் பெண்கள் வரையிலிருந் தார்கள். பலமில்லாதவரும், வறியவரும் ஒரு மனைவியை வைத்திருந்தனர், அல்லது மனைவி இல்லாது இருந்தனர். பொருள் ஆதார நிலைமை நன்றா யில்லாவிடினும் பெண்துணை வேண்டுமென்னும் விருப்பினால் ஆடவன் ஒருத்தியை விலை கொடுத்து வாங்குவான் அல்லது திருடிக் கொண்டு வருவான். இவ்வடிப்படையிலிருந்தே ஒழுக்கம் ஒழுக்கமின்மை என்னும் நியாயங்கள் தோன்றுகின்றன. ஒழுக்கம் என்பது சாதாரணமாக மக்க ளிடையே நடப்பது; ஒழுக்கமின்மை அம் மக்களிடையே நடவாதது. பின்பு சட்டங்கள் தோன்றி ஒழுக்கமின்மைக்குத் தண்டனைகளை விதிக்கின்றன. பெண்களும் ஆண்களும் வாழ்கின்ற இடங்களில் இச் சட்டங்கள் நிலை பெறுகின்றன.
பழைய சட்டங்களை வகுத்த சோலன்1 (கி.மு. 504) என்னும் கிரேக்கர் வியபிசாரத்தை சட்டதிட்டப்படுத்த நினைத்து அரசாங்க வியபிசார விடுதி ஒன்றைத் திறந்தான். அவ் விடுதிக்கு ஒன்றரைப் ‘பென்ஸ்’ (ஒன்றரை அணா) வரையில் கட்டணம் கொடுக்கும் ஆடவன் அனுமதிக்கப்பட்டான். இவ்வாறு கிடைத்த பொருளைக் கொண்டு சோலன் அபிரோடைற் என்னும் காதலுக்குரிய பெண் தெய்வத்திற்குக் கோவில் கட்டினான். இது பிற்காலத் தில் யூத குருமார் எருசலேம்2 கோவிலைக்கட்டுவதற்கு ஒழுக்கந்தவறிய பெண்களிடமிருந்து வரி தண்டியது போன்றதாகும், பரத்தையராகிய இக் கீழ்த்தரப் பெண்கள் மணவாழ்க்கைக்குப் பெருந்தீங்கு விளைவித்தார்கள். கிரேக்கர் ஆசிய மக்களின் உல்லாச வாழ்க்கையை அறிந்து பகட்டான பரத்தையரின் பழக்கத்தைப் பெற்றார்கள். முன் கூறப்பட்ட அஸ்பேசியா என்னும் பெரிக்கிளிசின் மனைவி அதேன்சில் நடத்திய பரத்தையர் பள்ளிக் கூடத்துக்கு அதேனிய மக்களின் பெண்களும், புதல்வியரும் சென்றனர். பைரனி (Pyryne) என்னும் பரத்தை தனது உழைப்பில் ஒரு பகுதியை தீப்ஸ் நகரின் அழிந்த மதிலைத் திருத்துவதற்குக் கொடுத்தாள். சாகிரடீஸ், அரிஸ்டாடில், பிளாடோ முதலியோருக்குப் பரத்தையரின் உறவு இன்றி யமையாதிருந்தது. பரத்தையர் தாய்மாரும், மனைவியருமாயுமிருந்தனர். பரத்தையர் பெறும் பிள்ளைகள் முறையான குழந்தைகளாகக் கொள்ளப் பட்டமையால் இளம் பெண்கள் பரத்தைமைத் தொழிலைக் கைக்கொள்ளும் படி தூண்டப்பட்டார்கள்.
இவ்வாறு ஐரோப்பாவில் அழகுக் கலைக்கல்வியும் பரத்தையரிட மிருந்து ஆரம்பித்துள்ளது. பரத்தையரின் இயக்கமே பெண்களின் முதல் இயக்கம் எனக் கூறலாம். பிற்கால சீர்திருத்த வளர்ச்சிக் காலங்களில் பெண்கள் இம் முறையைச் சிறிது மாற்றி ஆடவர் விடுவித்துக் கொள்ள முடியாதபடி அவர்களுக்குப் புதிய விலங்கு இட்டார்கள்.
உரோமப் பெண்கள்
உரோமப் பெண்களின் நிலை, பார்வைக்குக் கிரேக்கப் பெண்களின் நிலையிலும் உயர்ந்ததெனத் தோன்றும். உரோமர்களிடையும் ஆடவர் கட்டுப்படுத்தப்படாத தலைவர்களாயிருந்தனர். மணச் சடங்கில் பெண்ணின் கையில் திறவுகோல் கொடுக்கப்பட்டது. இது வீட்டு அதிகாரம் அவளிடம் அளிக்கப்பட்டதைக் குறிக்கின்றது. மணமகன் தனது கைவிரலில் இரும்பு மோதிரத்தை அணிந்தான். இது அவன் கட்டுப்படுத்தப்பட்டதை அறிவிக்கும். பெண்ணுக்குச் சிறுவயதில் மணம் நிச்சயிக்கப்பட்டது; பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில் மணம் நிகழ்ந்தது. பெண் கணவனின் தந்தை யால் தெரிந்து எடுக்கப்பட்டாள். அவள் திருமணத்துக்குத் தனது சம்மதம் கொடுக்க வேண்டியதில்லை; தந்தையின் பாதுகாப்பிலிருந்து அவள் கணவன் பாதுகாப்புக்குச் சென்றாள். கிரேக்க மனைவிக்கும் உரோமன் மனைவிக்குமிடையில் சமூக நிலைமையில் வேறுபாடு உண்டு. உரோமன் பெண், பெண்களுக்கு எனத் தனிமையாகக் கட்டப்பட்ட இடத்தில் வாழ வில்லை. அவள் கணவனோடு இருந்து உண்டாள்; விருந்துகளில் கலந்து கொண்டாள். அவள் வீட்டுக்கு வருபவர்களை எதிர்கொண்டாள்; விரும்பிய போது வீட்டை விட்டு வெளியே சென்றாள்; நியாய மன்றங்களில் வழக் காளியாக அல்லது சாட்சியாகச் சென்றாள். கணவன் வீட்டிக்குத் தலைவ னாகவிருந்தான். வெளியிலுள்ள வேலைகள் எல்லாவற்றுக்கும் அவனே பொறுப்புடையவன். குடும்பத்திலுள்ளவர்கள் அடிமைகள் விலங்குகள் எல்லாம் தலைவனுக்குரியவை. மிக முற்காலத்தில் மனைவி மதுவருந்தும் பழக்கமுள்ளவளாயிருந்தால், அவளைக் கணவன் கொன்றுவிடுதல் குற்றமாகக் கருதப்படவில்லை. டொமிட்டியஸ் என்பவன் பெண் ஒருத்தி வைத்தியன் சொன்ன அளவுக்கு அதிகம் மது அருந்தியதற்காக அவள் தன் கலியாணத்தால் கிடைத்த பணத்தை இழந்துபோகும்படி தீர்ப்புச் செய்தான். மக்களின் ஆட்சி உண்டானபோது உரோம் நாட்டில் தந்தை ஆட்சி நடைபெற்றது. பெண்கள் உரிமையைப் பற்றியிருந்த பழைய காலக் கருத்துக்கள் மறைந்தபோது அவர்கள் தங்களுக்கு வாய்ப்பாக அவைகளை மாற்றிக்கொண்டார்கள். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கும் பங்கு இருந்தது. இப்பொழுது அவர்கள் தமது உடைமை களையும் செல்வத்தையும் தமது அதிகாரத்திலேயே வைத்திருந்தார்கள். பெண்கள் சம்பந்தமான கருமங்களைப் பற்றி ஆலோசிப்பதற்கு இவர்கள் அரசாங்கத்திலும் வேண்டப்பட்டார்கள்.
“எல்லாச் சாதியினரும் தங்கள் பெண்களைக் கட்டியாள்கிறார்கள்; நாங்கள் ஆண்களை மாத்திரம் ஆள்கின்றோம்; எங்களுக்கும் மேலாகப் பெண்கள் ஆள்கிறார்கள். நாம் நமது பெண்ணை அடக்கி ஆளும் திறமையுள்ளவர்களாயிருந்தால் பெண்கள் சம்பந்தமான தொல்லைகள் இரா. நாம் வீட்டுக் கருமங்களில் அதிகாரத்தையிழந்துவிட்டபடியால் பொதுக் கருமங்களிலும் பெண்கள் எங்களைக் கட்டியாளுகின்றார்கள். நாங்கள் தனிப்பட்டு நின்று அவர்களை எதிர்க்கமுடியாது. அவர்களின் ஒன்று சேர்ந்த அதிகாரத்தை நாம் அஞ்சுகின்றோம். இந்த ஒழுங்கற்றவர்களிடத்தில் எங்களை நாம் ஒப்புவித்தால் அவர்களின் பேராசையான செயல்களுக்கு முடிவு காண இயலாது. உண்மையாகக் கூறுமிடத்து பெண்களுக்கு விடுதலையே கூடாது. அவர்களுக்கு எல்லாச் செயல்களிலும் கட்டுப்பாடு வேண்டும். பெண் எங்களோடு சம உரிமையைப் பெற்றால் அவள் எங்களை விரைவில் பின்னால் தள்ளிவிடுவாள்” என்று கேடோ (Cato- கி.மு. 195) கூறியுள்ளார்.
கிரேக்க நாகரிகம் பரவியதாலும், அரசாங்கத்தில் அதிகாரம் உண் டானமையினாலும், செல்வம் அதிகரித்தமையினாலும் உரோமப் பெண்கள் கேடோ கூறியதுபோல ஆண்களின் கட்டுப்பாட்டினின்றும் விடுபட்டு வியக்கத்தக்க முன்னேற்றமடைந்தார்கள், கிரேக்க நாட்டில் காணப்பட்ட பரத்தையரின் நடைமுறைகள் பெரிய அளவினதாயும் கீழான தன்மை யுடையதாயும் உரோமில் தோன்றலாயின. பெரிய அரசாங்க உத்தியோகத் தரின் மனைவியர், தண்டனை பெறாது தமது அளவு கடந்த இச்சையைத் தணித்துக் கொள்ளும் பொருட்டுத் தம்மைப் பகிரங்க விலை மாதராகப் பதிவு செய்து கொண்டார்கள். அக் காலத்தில் சட்டம் வியபிசாரக் குற்றங் களுக்குக் கடுந்தண்டனை விதித்தது. தேவ அரம்பையை ஒத்த கட்டழகி யாகிய மெசலினியா (Messalinia) போன்ற இராணிகளே வியபிசார விடுதி களில் பரத்தமைத் தொழிலை நடத்தினார்கள். பெண்களின் விடுதலை எவ்வளவு தூரம் சென்றதென்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
உரோமப் பெண்களின் விடுதலையினால் பிறப்பு விகிதம் குறைந்தது. இதனைச் சட்டங்களினால் உயர் நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை. இது உரோமரின் விழுகைக்கு ஒரு காரணமாகவிருந்தது.
பெண் பல கணவரை மணத்தல்
உரோமர் பிரிட்டன்மீது படையெடுத்த காலத்தில் பிரித்தனில் பெண்கள் பல கணவரை ஒரே காலத்தில் மணந்திருந்தார்கள். இதனைச் சீசர் ‘டி பெல்லோ கலிக்கோ’ என்னும் தனது நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் சாதாரணமாக பத்து முதல் பன்னிரண்டு கணவரை மணந்திருந்தாள். அவர்கள் பெரும்பாலும் சகோதரராகவும், தந்தையும் புதல்வர்களுமாயு மிருந்தனர். பெண் பல கணவரை மணக்கும் வழக்கம், பெண் தொகை குறைவதாலும் ஆண் தொகை அதிகப்படுவதாலும் உண்டாகின்றது என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள், இவ் வழக்கம் இன்றும் வடமேற்கு அமெரிக்க மக்கள், தென்னிந்திய மக்கள் சிலர், திபெத்து, மக்களிடையே காணப்படுகின்றது.
எவன் பெண்ணை முதலில் சேர்கின்றானோ, பிறக்கும் பிள்ளை அவனுடையதெனப் பிரித்தானிய மக்கள் கொண்டார்கள் எனச் சீசர் கூறியுள்ளார். ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்காத்துலாந்து முதலிய நாடுகளில் மணத்திலன்றைய இரவு பெண்ணை நண்பருக்குக் கொடுப்பதாகிய வழக்கு சமீப காலம் வரையில் நடைபெற்றது. இது அந் நாடுகளில் பலதார மணம் இருந்ததென்பதற்குச் சான்றாகும். பெண் பலரை மணக்கும் வழக்கம் தாயாட்சியை வளரச் செய்தது.
ஜெர்மனியர் பெண்களைப் பரிசுத்தமுடையவர்களாகக் கருதினார் கள். அவர்கள் அவர்களின் புத்திமதியை அல்லது அவர்கள் செய்யும் தீர்ப்புக்களைத் தட்டமாட்டார்கள் என்று தாசிற்ரஸ் என்னும் பழைய சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார். மத்திய ஆப்பிரிக்கா, சின்ன ஆசியா முதலிய இடங்களிலும் தாயாட்சி வழக்கு உள்ள இடங்களிலும் பெண்கள் இன்றும் தலையாரிகளாகவும் குருமார்களாகவும் இருந்து வருகின்றனர். தாசிற்ரஸ் காலத்தில் ஜெர்மனியில் ஆண்கள் முக்கிய நிகழ்ச்சிகளைப் பெண்களுடன் கலந்து ஆலோசித்தார்கள். ஆப்பிரிக்காவிலே சாம்பசி நீக்ரோவர் பெண்கள் கூடி ஆலோசிக்கும் இடங்களுக்குச் செல்லமாட்டார்கள். அவர்கள் மனைவி யரின் சம்மதமின்றிப் பிறருக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள். பன்ஸ் நீக்ரோவர்களுக்கிடையில் ஆண்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தலையாரியின் தாய் கலந்து கொள்வாள்.
தந்தை ஆட்சி
தாயாட்சிக்கு முன் தந்தை ஆட்சியிருந்தது. கன்றுக்குட்டி மாட்டுக் காரனுக்குச் சொந்தமாவதுபோல பிள்ளை தந்தைக்குச் சொந்தமானவன் என்னும் சட்டம் இருந்தது. பெண், திருடப்பட்டு அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டாள். செல்வன் அல்லது பலமுடையவன் பல பெண்களை வைத்திருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகைக் கடமை என்று தாசிற்ரஸ் கூறியுள்ளார். அயர்லாந்தின் உள்நாடுகளில் பெண்களைத் திருடுவதாகிய வழக்கங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை யிலும் இருந்தது. ஸ்காந்திநேவிய மக்களுள் வைகிங் (Vikings) ஆடவர் தமது அதிட்டத்துக்கு ஏற்றவாறு, இரண்டு, மூன்று அல்லது பல மனைவியரை வைத்திருந்தார்கள்; செல்வரும் தலையாரிகளும் மிகப் பல மனைவியரை உடையராயிருந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் விலை கொடுத்து வாங்கி னால் அவன் அவளை விற்கவும் முடியும், இவ் வழக்கம் ஜெர்மனியில் சிறு வகுப்பினரிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் இருந்தது. ஒருவன் விரும்பியபோது தனது மனைவியையும் பிள்ளைகளையும் விற்றான்.
இங்கிலாந்திலே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் கணவன் தனது மனைவியை அவளது சம்மதமின்றியே தான் விரும்பிய படி ஆடுமாடுகள் விற்பதுபோல விற்கும் உரிமை பெற்றிருந்தான். சிற்றரசன் (Duke) ஒருவன் தனது வண்டி யோட்டுபவனின் மனைவியை விலைகொடுத்து வாங்கிய ஆவணமும், செருப்புத் தைப்பவன் கயிற்றில் கட்டிச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்ற பெண்ணை ஐந்து பவனுக்கு வாங்கிய ஆவணமும் காணப்படுகின்றன.
கிறித்துவ மதமும் பெண்களும்
முற்காலத்தில் ஜெர்மனியில் விதவை கொல்லப்பட்டுக் கணவனோடு புதைக்கப்பட்டாள். காலத்தில் இவ்வழக்கங்கள் மறைந்துபோக பெண்ணுக் குக் கணவனைத் தெரியும் உரிமை உண்டாயிற்று. ஆடவனின் எல்லையில் லாத அதிகாரம் தளர்ந்தது. இப்பொழுது அவன் பெயரளவில் பெண்ணின் பாதுகாப்பாளனாகவிருந்தான். பதினைந்தாம் நூற்றாண்டில் பெண், சொத் துக்கு உரிமையுடையவளானாள். பின்பு கிரேக்கர் உரோமர்களிடையே நேர்ந்தவை போன்ற மாற்றங்கள் உண்டாயின. பிராங்கிய (Frankish) மக்களின் ஒழுக்கத்தைப் பற்றி அக்காலச் சட்டங்களே வெளியிடுகின்றன. அக் காலத்தில் குருமாரோடு கிறித்துவ மதத்தைத் தழுவிய பெண்கள் தொடர்பு வைத்திருக்க அனுமதிக்கும் சமயச் சட்டங்கள் இருந்தன. கிறித்துவ மதம் பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதற்கு உதவி புரிந்ததெனக் கூற முடியாது. தொடக்கத்தில் அது அரசியல் சம்பந்தமும் வாணிக சம்பந்தமும் உடையதாயிருந்தது. அது பலதார மணங்களைக் கண்டிக்கவில்லை. கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் பல பெண்களை மணத்தல் பாவமாகக் கொள்ளப்படவில்லை. கிறித்துவ சமயம் பெண்களுக்குச் சிறிதும் மதிப்புக் கொடுக்கவில்லை. பிற்காலக் குருமார், பெண்கள் அசுத்தமானவர்களும் பாவம் நிறைந்தவர்களும் எனக் கூறினர்.
பிற்காலத்தில் கிறித்துவ நாடுகளில் ஒருவன் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் சமூக, பொருளாதார ஏதுக்களால் உண்டாயிற்று. பல பெண்களை மணக்கும் வழக்கம் மாறி ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் உண்டானபோதும் வைப்பாட்டியின் எண்களைப் பற்றிய கட்டுப்பாடு இருக்கவில்லை. வைப்பாட்டிகளுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை இருக்கவில்லை; அவர்கள் முறைமையான பிள்ளைகளாகவும் கொள்ளப்படவில்லை. இதனால் மரியாதையுடைய பெற்றோர் வைப்பாட்டி களின் குமாரருக்குத் தங்கள் குமாரிகளை மணம் முடிக்க விரும்பவில்லை. இதனால் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் வலிமையடைந்தது. பொருளாதாரம் ஏதுவாகத் தோன்றிய ஒருதார மணத்தைச் சமயமும் கிரியைகள் மூலம் வற்புறுத்திற்று.
முன்பு மிலித்தியா, இசிஸ், அபிரடைட் முதலிய பெயர்களால் மக்கள் வழங்கிய கன்னித் தெய்வத்துக்குப் பதில் மேரி வழிபாடு உண்டாயிற்று. இது பெண்களின் உயர்வுக்கு ஏதுவாயிருந்தது.
15ஆம் நூற்றாண்டில் கிறித்துவ நாடுகளில் ஒழுக்கம்
பதினைந்தாம் நூற்றாண்டில் கிறித்துவ நாடுகளில் ஒழுக்கம் மிகவும் தாழ்வடைந்திருந்தது. பிரபுக்கள் காதற் பாடல்களைப் பாடிக்கொண்டு மண மான பெண்களைப் பெற முயன்றார்கள், மணமான பெண்களும் உரோமன், கிரேக்க பரத்தையரைப் போலத் தமது காதலை அவர்களுக்கு விற்றார்கள், இப்பெண்களும் கிரேக்க பரத்தையர் போலத் தம்மை அழகிய உடைகளால் அலங்கரித்தும், மேனி மினுக்குப் பொருள்களைப் பயன்படுத்தியும், நறுமணங்களைப் பூசியும் தம்மை ஆடவரின் கவர்ச்சிக் கேற்றவர்களாக்கிக் கொண்டார்கள். சன்னியாசிகளே (monks) அவர்களுக்குப் பாடம் கற்பித்தார்கள்.
அக் காலத்தில் உயர்ந்தவர்களிடையும் தாழ்ந்தவர்களிடையும் ஒழுக்கம் ஒரேவகையாகவிருந்தது. இரண்டாம் பயஸ் என்னும் பாப்பாண்ட வர் பதினைந்தாம் நூற்றாண்டில் வீயன்னா நகரின் ஒழுக்க நிலை எவ்வாறு இருந்ததென எழுதிவைத்துள்ளார். “மக்கள் எல்லோரும் காதல் ஒழுக்கங்களி லேயே பொழுது போக்கினார்கள். பகிரங்க வியபிசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சில பெண்களே ஒரு ஆடவனோடு திருப்தியடைந்திருந் தார்கள். பிரபுக்கள், குடியானவனின் அழகிய மனைவிக்குப் பின்னால் ஓடுவது பொது நிகழ்ச்சியாயிருந்தது. அந் நிழச்சிக் காலங்களில் பெண்ணின் கணவனே விருந்தாளியாகிய பிரபுவுக்குச் சாராயம் கொடுத்து, அவனை அவளோடு தனிமையாகக் கூடிக்குலாவும்படி விடுவான். பெண்கள் பலர் தாம் விரும்பாத கணவரை நஞ்சு கொடுத்துக் கொன்றனர். அரசாங்க உத்தியோகத்தர் தம் மனைவியர் புதல்வியரோடு ஒழுகுவதை எதிர்த்த குடியானவர்களில் பலர் கொல்லப்பட்டார்கள்.
வியபிசாரத்துக்குக் காரணம்
வியபிசாரம் ஒருவன் ஒருத்தியை மணப்பதாகிய ஒரு தார மணத்தி னால் தடுக்கக் கூடியதன்று. அது ஆடவனின் பெண் சேர்க்கை விருப்பும், பெண்ணின் ஆண் சேர்க்கை விருப்பும் தகுந்த வழியில் கட்டுப்படுத்தப் படாவிடில் உண்டாகின்றது. சமூகத்தில் ஆடவரிலும் அதிகமாகப் பெண்க ளிருந்தாலும், பெண்களிலும் ஆண் மிகுந்தாலும் இது அதிகம் நிகழ்கின் றது. இயற்கையான தூண்டுதல்களின் நிமித்தம் ஆடவன் வியபிசாரத்தை விரும்பும் போது பெண்கள் அதனால் இலாபம் அடைய முந்துவார்கள்.
மத்திய காலத்தில் இவ்வகைப் பல காரணங்களால் வியபிசாரம் அதிகப்பட்டது. அதன்விளைவாக ஒரு தாரமணம் சமயத்தினால் கட்டாயப் படுத்தப்பட்டது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் வாழ்நாள் முழுமையிலும் இருக்கக் கூடியதல்லாத ஆண் பெண் உறவுகள் பாவமானதாகவும் தண்டனைக் குரியனவும் என்று கருதப்பட்டன.
கிறித்துவ மதம் முதலில் குருமார் திருமணம் செய்வதைத் தடுக்க வில்லை; கோவிலைச் சேர்ந்த சன்னியாசிகள், சன்னியாசிப் பெண்கள் மாத்திரம் திருமணம் செய்யத் தடுக்கப்பட்டிருந்தார்கள். கி.பி.869ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் பல மனைவியரையுடைய குருமார் தமது சமய சமபந்தமான உடையைக் களைந்துவிட வேண்டுமெனச் சொல்லப்பட்டுள்ளது. சிறிது காலத்தில் சன்னியாசிகளும் சன்னியாசிப் பெண்களும் தங்கும் மடங்கள் களியாட்டத்துக்குரிய இடங்களாகவும், வியபிசார விடுதிகளாகவும் மாறின. ஒழுக்கக்கேடுகள் அளவு கடந்து பெருகின. குருமாரின் இன்ப நுகர்வு அவர்களின் நிலையான சோம்பல் வாழ்க்கையினால் செழிப்படைந்தது. குருமாரின் இகழ்ச்சிக்குரிய ஒழுக்கக் கேடு காரணமாக மூன்றாம் கிரிகரி (Gregory III), குருமார் எல்லோரும் துறவிகளாயிருத்தல் வேண்டுமென்னும் சட்டத்தைக் கட்டாயமாக்கினார். இப்பொழுது ஆயிரக்கணக்கான குருமார் தமது இச்சைகளைத் தமது பாதுகாப்பிலும் தமது அதிகாரத்திலும் இருந்தவர் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒழுக்கங்கெட்ட இச்செயல்களைப் பற்றிப் பாடல்களும், கதைகளும், பழமொழிகளும் அக் காலத்து வழங்கின.
மத்திய காலத்தில் திருமணமின்றி அலைந்து திரியும் ஒரு வகைச் சன்னியாசிக் கூட்டத்தினரால் ஒழுக்கக் கேடுகள் பரவின. பொறாமை, பிறர் போட்டியிடுவார்கள் என்ற பயம் முதலியவைகளால் பட்டினங்களில் அன்னியருக்கு வேலைகள் கொடுக்க மறுக்கப்பட்டது. அக் காலங்களில் வாழ்க்கையின் பொருட்டும் வியபிசாரம் ஆரம்பித்தது. போர்களில் பல ஆண்கள் மடிந்தனர். சிலுவைப் போர்களில் ஈடுபட்ட ஆண்களில் சிறந்தவர், பல ஆண்டுகள் அயல் நாடுகளில் தங்கினர். ஆடவர் பலர் கூட்டங்களாகச் சேர்ந்து அயல்நாடுகளிற் சென்று வாணிகம் நடத்தினர். எல்லாப் பட்டினங் களிலும் வாழும் மக்களில் பெரும்பாலோர் பருவமடைந்த பெண்களா யிருந்தனர். இது காரணமாக ‘பெண்களின் விடுதிகள்’ என்னும் பெயருடன் வியபிசார நிலையங்கள் தோன்றின. இவ் விடுதிகளுக்கு வரிகள், எழுத்து மூலமுள்ள கணக்குகளைக் கொண்டு விதிக்கப்பட்டன. இவ் விடுதிகளில் வாழும் பெண்களின் சார்பாகத் தனிச் சட்டங்கள் இருந்தன. இவ் விடுதியைச் சேராது தனிப்பட்ட வியபிசாரத்தால் தம்மோடு போட்டியிடும் பெண்கள் மீது இவர்கள் வழக்குத் தொடுக்கக் கூடியதாகவிருந்தது. கி.பி.1,414இல் கான்ஸ்டன்ஸ் (Constance) என்னும் இடத்தில் கூடிய மகாநாட்டின்போது கிடைக்கக்கூடிய ஊதியத்தை எதிர்பார்த்து அவ்விடத்தில் 1,500 இவ்வகைப் பரத்தைப் பெண்கள் திரண்டார்கள், சாள்ஸ் (Charles) என்பவனின் பட்டாளத்தில் 900 குருமாரும், 1,600 பரத்தைப் பெண்களும் இருந்தார்கள். உரோமன் இராணிகள் மதுக் கடைகளுக்குச் சென்று தம்மை முட்டாக்கிட்டு மறைத்துக் கொண்டு பரத்தைமையால் தமது இச்சைகளைத் தணித்துக் கொண்டார்கள்.
பரத்தைமை எல்லாக் காலங்களிலும் பாவமுடையதாகக் கொள்ளப் பட்டது. சில சமயங்களில் “கிறித்துவ மதத்துக்கு நேரும் பலவகைத் தீமை களைப் போக்குவது காரணமாக இக் குற்றம் பரிசுத்த தேவாலயத்தால் மன்னிக்கப்படுகின்றது” இவ்வாறு நேண்பெக் என்னுமிடத்தில் பதினைந் தாம் நூற்றாண்டில் கூடிய நகர மகாநாட்டில் கூறப்பட்டது. கிறித்துவ மதத்தில் பெரிய புரட்சியைத் தோற்றுவித்த உலூதர், ஆண் சேர்க்கை சம்பந்தமாகத் தம்மைத் திருப்திப் படுத்திக் கொள்வதற்குப் பெண்களுக்குப் பூரண உரிமையுண்டு என்றும், உண்பது, உறங்குவது, விடாய்க்கு நீர் குடிப்பது போல அது அவளுக்கு அவசியமானவைகளுள் ஒன்று என்றும், இவை களுக்கு மாறாகத் தலையிடுகின்றவன் இயற்கைக்கு இசைய நடக்காதவ னென்றும், நெருப்புச் சுடாதென்றும், தண்ணீர் நனைக்காதென்றும், மனிதன் உண்ணக் குடிக்க நித்திரை கொள்ள மாட்டானென்றும் நினைப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.
பழைய எபிரேயருள் ஒருவன் புதல்வனில்லாமல் இறந்து விட்டால் அவனுடைய விதவையை அவனுடைய சகோதரன், புதல்வன் பிறக்கும் வரையில் சேர்ந்திருக்கலாம் என்னும் சமயவிதி உண்டு. இவ்வழக்கம் நியோகம் என்னும் பெயருடன் பஞ்சாப்பில் நடைபெறுகின்றது. மங்கோலி யர், சைபீரியர் முதலிய மக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்து வருகின் றது. இவ் வழக்கத்தைத் தழுவிப் போலும் உலூதர், ஆண்மை (Impotent) அற்றவனை மணந்தவர்களில் இது மன்னிக்கத்தக்கதாகவிருந்தது. ஒருத்தி கணவனின் சகோதரன் அல்லது அவனுடைய கிட்டிய உறவினனைச் சேரலாம் எனச் சமயச் சட்டம் கொண்டு வந்தார். ஆண்மையில்லாத ஒருவன் தனது மனைவியுடன் அயல் வீட்டுக்காரனிடஞ்சென்று தனது மனைவியின் காதல் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்க வேண்டும். அவன் அதற்கு உடன்படாவிட்டால் அவன் தனது மனைவியை நன்றாக உடுத்தி கிட்டிய சந்தைக்குச் செல்ல வேண்டும். அங்கு அவள் தனது கணவனுக்குப் பிள்ளையைப் பெற்று அளிப்பதற்கு உதவியாயுள்ள ஒரு காதலனைக் கண்டுபிடிக்கக் கூடும் எனப் பழைய ஜெர்மன் ஆசிரியர் ஒருவர் அக் காலத்தில் ஜெர்மனியில் இருந்த வழக்கத்தைக் குறிப்பிட் டுள்ளார். உலூதர் முன்னிருந்த இவ்விதியைப் பின்பற்றித் தனது விதியைக் கூறியிருக்கலாம். பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமையின் பொருட்டு நேர்ந்த போரில் உலூதரின் கருத்துப் பெண்களுக்குச் சார்பாகவுள்ளது.
பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி பெண்கள் விழிப்படைந்த காலமாகும். அப்பொழுது அலங்காரம் (fashion) என்னும் எழுச்சி பெண்க ளிடையே எழுந்தது. மிக அலங்காரியாகிய பெண் தன்னை அலங்காரஞ் செய்து கொள்வதற்கு நாளில் ஏழுமணி நேரம் செலவிட்டாள். பெண்கள் இயற்கையாகக் கவர்ச்சிக்குரிய அழகு வாய்ந்தவர்களாயிராவிட்டாலும் ஆடவனைக் கவருவதற்கு அல்லது சமூகத்தில் மதிப்படைவதற்குக் கல்வி கற்கின்றார்கள். முன் கூறப்பட்ட கிரேக்க பரத்தையர் கூட்டத்தினராலும் இம் முறை கையாளப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் நடுப்பகுதியிலிருந்து இத்தாலியில் கல்வி பெண்களின் சீதனமாகக் கருதப்பட்டது.
பெண்களின் விடுதலை சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டு வந்தது. அதனை எவ்வகையிலும் ஆடவரால் தடுக்க முடியவில்லை. இடையிடையே பெண்களின் விடுதலை சம்பந்தமான கிளர்ச்சிகள், வரலாற்றில் இடம் பெற்ற பலரால் நடத்தப்பட்டு வந்தன. பொருளாதார அரசியல் காரணங்களால் பெண்களின் விடுதலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அதனால் பெண்கள் வாணிகத்துறையில் ஆண்களை ஒத்த உரிமை அடைந்தார்கள். தொடக்கத்தில் எல்லா மக்களிடையும் பெண்கள் சமூகத்துக்குரிய விரும்பத் தகாத எல்லாக் கடின வேலைகளையும் புரியும்படி கட்டாயப்படுத்தப்பட் டார்கள். அவர்கள் நூல் நூற்றல், நெசவு நெய்தல், தைத்தல், சவுக்காரஞ் செய்தல் போன்ற தொழில்களையும் செய்தார்கள். பொருளாதார நெருக்கடி யினால் அவர்கள் இப்பொழுது பெண்களுக்கு உரியவனவல்லாத வேலை களையும் புரியலானார்கள். இவை நிலைமையை மாறுதல் அடையச்செய்தன. இப்பொழுது பெண்கள், ஆண்களுக்கு மாத்திரம் விடப்பட்டிருந்த கைத் தொழில், வாணிகம் முதலியவைகளையும் செய்து ஊதியம் அடைந்தார்கள். இங்கிலாந்திலே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்க்கைப் போராட்டத்தின் நெருக்கடியினால் பெண்களின் விடுதலைப் போர் அனுகூலமாக நடைபெற்றது. நூல் நூற்கவும், நெசவு செய்யவும், ஆடைக்கு அச்சடிக்கவும் இயந்திரத் தொழிற்சாலைகளில் ஒரு இலட்சம் பெண்களும் எண்பதினாயிரம் சிறுவர்களும் வேலை செய்தார்கள், இப்பெண்களும் சிறுவர்களும் மிகவும் மோசமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.
1907இல் ஜெர்மனியில் மாத்திரமே 2,10,000 பெண்கள் தொழிற்சாலை களில் வேலை செய்தார்கள். இவர்களில் நூற்றுக்குப் பதின்மூன்று வீதத்தினர் மணமானவர்கள். ஆண்களிலும் பார்க்கப் பெண்களின் வேலை திறமை யற்றதாகவிருந்தமையால் பெண்களின் கூலி குறைவாயிருந்தது. ஓரோரிடங்களில் இதற்கு மாறாகவும் இருந்து வந்தது. அமெரிக்காவில் இது இவ்வாறு இருந்தது. அமெரிக்காவிலே மெயின் (Maine) போன்ற தொழிற் சாலைகள் மிகுந்த பட்டினங்கள் “பெண்களின் பட்டினங்கள்” என்று அறியப்படுகின்றன. அங்கு ஆண்கள் சமையல், துணிதோய்த்தல், குழந்தை களைக் கவனித்தல் போன்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பார்கள். மனைவி மார் தொழிற்சாலைகளில் ஆடவர்களைப் பார்க்கிலும் அதிக கூலி பெற் றார்கள். ஆதலால் ஆடவர் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். அமெரிக்காவிலே முற்போக்கில் உயர்ந்து சென்ற பெண்கள் ஒரு தனிப்பட்ட பெண் ஆட்சியை நடத்துகிறார்கள். இது பெண்கள் குறைவாயிருந்த முற்காலத்தில் பெண்கள் ஆடவரைத் தமது எண்ணத்தின் படி நடத்திய வழக்கத்தின் உயிர்ப்பேயாகும். ஐரோப்பிய மக்களுக்கு இந் நிலைமை இயற்கைக்கு மாறுபட்டதுபோல் காணப்படலாம், இன்றும் அமெரிக்காவில் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாயிருப்பதால் இந் நிலைமை அங்கு காணப்படுகின்றது. அங்கு நான்கு கோடி பெண்களும் நான்கு கோடியே நாற்பது இலட்சம் ஆண்களும் உள்ளார்கள். பெண்கள் பொருளாதார விடுதலையினால் இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களை ஒத்த சம உரிமை அடைந்துள்ளார்கள். எல்லா நாகரிக சாதியாரும் பெண் களும் ஆண்களும் ஒரே உரிமை உள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள் கின்றனர். இன்று விடுதலை அடைந்த பெண்களின் ஒழுக்க நிலை, இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கேடோ என்னும் உரோமானியர் கூறியதை ஒப்ப ஆடவருக்குப் பயம் விளைப்பதாயிருக்கின்றது. இன்று நாம் அதே வழிக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம். நாம் கேடோ கூறியதை ஒத்த நிலையை அடைவதற்குச் சிறிதுகாலம் செல்லலாம் என ஒரு சீர்திருத்த வாதி கூறியுள்ளார்.
திருமணம் (மேற்குத் தேசங்களில்)
திருமணம் குடும்ப நிகழ்ச்சியிலும் பார்க்கச் சமூக நிகழ்ச்சியாகக் கருதப்படுகின்றது. திருமணத்தினால் மற்றொரு புதிய குடும்பம் உண்டா கின்றது. ஆடவன் ஒருவனதும், பெண் ஒருவளதும் வாழ்நாளில் திருமணம் மிகச் சிறப்புடையதாதலின் அது முக்கியத்துவமுடையதாகக் கொள்ளப்படு கின்றது. முற்காலத்தில் இந்திய ஆடவர் தாமே தமது மனைவியரைத் தெரிந்துகொண்டனர். பிற்காலத்தில் இச்செயல் பெற்றோரின் கடமையாக மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் பெற்றோர் தமது புதல்வரையும் புதல்வியையும் தாமாகவே தமது மனைவியரையும் கணவரையும் தெரிந்து கொள்ள அனுமதிக்கின்றனர். ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ தெரிவதன் முன் இருவரும் சிலகாலம் பழகுகிறார்கள். இது ஆடவனால் தான் ஆரம்பிக்கப்படுகின்றது. விக்டோரியா இராணி காலத்தில், பெண்ணின் தந்தை தனது சம்மதத்தைத் தெரிவித்தாலன்றி ஆடவன் அவளோடு பழகுதல் முடியாது. பெண் “ஆம்” என்று தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்ததும் தெரிவு முடிவடைகின்றது. இது ‘வார்த்தைப் பாடு’ (Proposal) என்னும் மரியாதையான பெயரைப் பெறுகின்றது. பெண்ணின் தந்தை பழகு வதற்கு அனுமதித்தல், பெண் அவனை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்னும் கட்டுப்பாடு ஆகமாட்டாது. இன்று இளைஞன் ஒருவன் தனக்கு விருப்பமான இளம் பெண் ஒருத்தியோடு பேசிப் பழகுவதற்கு அவள் தந்தையிடமிருந்து அனுமதி பெறவேண்டியதில்லை. சில காலத்திற்கு முன் ஒருவன் பெண்ணோடு பழக வேண்டுமானால் தக்க ஒருவர் அவனை அவளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்; அல்லாத இளைஞனோடு பெண் பேசமாட்டாள். இன்று இவ்வாறு எவரும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. பெண்ணும் ஆணும் விரும்பினால் பேசிக் கொள்ளலாம். அவர்களைத் தடைப்படுத்துவார் யாரும் இல்லை. இன்று பெண்கள் வயது முதிர்ந்த பெண்களின் துணை இன்றி வெளியே செல்கிறார்கள். முற்காலத் தில் இவ்வாறு நிகழவில்லை. இவர்களை எல்லா இடங்களிலும் தனிமையில் சந்திக்கலாம். நடனமாடும் மண்டபத்தில் அல்லது சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் பெண்ணிடம் சென்று அவளுடன் இருக்கும் பெண் அல்லது ஆணுக்குக் குனிந்து வணக்கஞ் செய்தபின் அவளை நடித்துக் களியாட்டம் ஆடுவதற்கு அழைப்பது வழக்கத்துக்கு மாறான செயலாகக் கருதப்பட மாட்டாது. இன்றும் ஆணைப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் கொள்கையுடையவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் மிகச் சிலரே. ஆடவன் அழகும் மரியாதையும் உடையவனாகக் காணப்பட்டால் பெண் அறிமுகப்படுத்துவதைத் தேவைப்படமாட்டாள். பழைய நாளில் பழகுதல் என்பது ஆணைப் பொறுத்திருந்தது. பெண் ஒருபோதும் தனது எண்ணத்தை முதலில் அறிவிப்பதில்லை.
விக்டோரியா காலத்தில் பெண்கள் பெரிதும் வெளியே செல்ல வில்லை. ஆகவே அவர்கள் ஆடவரோடு அதிகம் பழகவில்லை. இப்பொழுது பெண்களுக்குத் தாம் அறிய வேண்டிய எல்லாரைப் பற்றியும், எல்லாக் கருமங்களைப் பற்றியும் தெரியும். ஆகவே அவர்களுக்கு ஆடவர் வகுப்பினரைப் பற்றிய மயக்கம் யாதும் இல்லை. அவர்கள் வாலிபரின் தேன் போன்று இனிப்பான பேச்சுக்களால் எடுபடமாட்டார்கள்; பகட்டாகத் தோன்றுகின்றவைகளில் அவர்கள் நம்பிக்கை கொள்வதும் இல்லை. ஆகவே அவர்களை மகிழ்விப்பது கடினம். இன்றைய வாலிபனுக்குப் பெண்ணோடு பழகுவது வில்லங்கமாகத் தோன்றும். பழைய போக்கில் அவளின் திருமண விருப்பத்தைக் கேட்டால் அவள் உடனே கெக்கட்டம் இட்டுச் சிரிப்பாள். இக்காலப் பெண்ணிடத்தில், பேசும் அறிவு அதிகம் உண்டு; அவள் அகன்ற அறிவும், கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதி யும் உடையவள். ஆவியாக மாறிவிடக்கூடிய காதலினாலும் பகட்டினாலும் மகிழ்ச்சியோடு வாழமுடியாதென்று அவளுக்குத் தெரியும். குறிக்கப்பட்ட ஒருவனை மணப்பதால் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் வாய்ப்புக்களும் இருக்குமெனக் கண்டால் அவள் திருமணத்துக்கு இசைகின்றாள். இன்று பெண் ஒருத்தி கூறுவது என்னவென்றால், “உன்னைக் காதலிக்கும் ஒருவனை அன்று, நீ காதலிக்கும் ஒருவனை என்பதாகும்.
இக்காலத்தில் ஆடவன் ஒருவன் தனது காதலை அறிவிக்கும் பொருட்டு மரத்தின் கீழ் ஒருத்தியின் கையைப் பிடிப்பது அல்லது புல்லின் மீது முழங்கால் படிவது இப்பொழுது இல்லை; என்னை மணஞ் செய்கின்றாயா என்று வெளிப்படையாகவும் நாணமின்றியும் கேட்கலாம். “செய்வேன்” என்று நாணமின்றியும் மன அசைவின்றியும் பெண் கூறலாம். திருமணத் துக்கு ஒருத்தியை இசைவுபடுத்துவதற்கு அவளைச் சுற்றித் திரிவதாகிய பழைய போக்கு விரைவில் மாறுபட்டு வருகின்றது. காதல், பகட்டு என்பன தமது கவர்ச்சியை இழந்துவிட்டன என்றாவது குடும்ப சேமத்துக்காகவும் காதல் நுகர்ச்சிக்காகவும் திருமணங்கள் செய்யப்படவில்லை என்றாவது கருதுதல் ஆகாது. காதலினால் பல திருமணங்கள் நிகழ்கின்றன. மேற்குத் தேசத் திருமணங்களைத் தோல்வி என்று கருதிவிடுதல் ஆகாது. மகிழ்ச்சி யளியாத திருமணத்துக்கு மருந்து திருமண நீக்கம்.
ஒரு ஆடவனும் பெண்ணும் மணம் முடிக்க இசைந்ததும் பெண் தனது இடதுகை மோதிர விரலில் கல்பதித்த மோதிரமொன்றை அணிந்து கொள்கின்றாள். இம்மோதிரம் அவளை மணஞ் செய்யப்போகும் ஆடவ னால் அளிக்கப்பட்டது. பெற்றோரின் விருப்பம் கேட்கப்படுகின்றது. மதிப் புக்குரிய குடும்பங்களில் ஒருநாள் குறிக்கப்படுகின்றது. அன்று உறவினரின் முன்னால் திருமணம் நிச்சயமான செய்தி கூறப்படுகின்றது. அன்று விருந்தும் நடனமும் உண்டு.
திருமணத்துக்கு நாள் குறிக்கப்படுகின்றது. மேல் நாட்டவர் நாள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு ஒரு நாளைப் போலவே எல்லா நாட்களும் நல்லவை. திருமணம் காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கும் மாலை மூன்று மணிக்கும் இடையில் நிகழும். மூன்று மணிக்குப் பின் திருமணம் நிகழ்வதில்லை. மேல் நாடுகளில் திருமணப் பதிவு நிலையங்களில் திருமணம் செய்து கொள்ளலாம். மணமகனும் மணமகளும் திருமணப் பதிவு நிலையத்துக்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடன் செல்வார்கள். பதிவு செய்பவர் அவர்கள் கணவன் மனைவியராக வாழ விரும்புகின்றனரா எனக்கேட்பார். ‘ஆம்’ என்று மறுமொழி வருமாயின் திருமணம் பதிவு செய்து கொள்ளப்படும். மணமகன், மணமகள் என்போர் அவர்கள்தான் என்று அத்தாட்சிப் படுத்துவதற்கும் திருமணத்துக்குச் சாட்சி அளிப்பதற்கு மாக உடன் சென்றவர்கள் உதவியளிப்பர். பதிவுகாரர் புதிய கணவன் மனைவியருக்கு திருமண அத்தாட்சிச் சீட்டுக் கொடுப்பார். முன் ஒரு முறை கலியாண நீக்கம் செய்தவர்களும் ஏழைகளும் பெரும்பாலும் இவ்வாறு திருமணத்தை முடித்துக்கொள்கின்றனர்.
மேல் நாட்டில் திருமணக் கொண்டாட்டம் சுருக்கமானது. அது சில மணி நேரமே நடைபெறுகின்றது. மிகக்கிட்டிய நண்பரும் சுற்றத்தவர்களு மல்லாத பிறர் மணமகள் அல்லது மணமகள் வீட்டில் தங்கியிருக்கச் செல்வ தில்லை. முதல்நாள் மாலை அல்லது திருமணத்தன்று காலையில் மண மகன் திருமணம் நடக்கும் இடத்துக்கு வருவான்; ஆனால் அவன் மணமக ளின் வீட்டில் தங்கமாட்டான். மணமகன் தனது சுற்றத்தவர் களோடும் நண்பர்களோடும் கோயிலுக்குச் செல்வான். அவன் அங்கு மணமகளின் வரவை எதிர்பார்த்திருப்பான். மணமகள் தனது தந்தை சகோதரர் முதலிய வர்களோடு அவ்விடத்துக்கு வருவாள். மணமகன் அவளைக் கோயில் வாயிலில் எதிர்கொண்டு அழைத்துக் கொண்டு பலிபீடத்துக்குச் செல்வான். மணமகளின் பக்கத்தார் இடப்பக்கத்திலும் மணமகளின் பக்கத்தார் வலப்பக்கத்திலும் இருப்பார்கள். மணமகள் மணமகனுக்கு இடப்பக்கத்தில் முழங்கால் படிந்து நிற்பாள். இருவரும் வரும்போது கோயிலுள்ள எல்லாரும் எழுந்து நிற்பார்கள். திருமணக் கிரியை நீண்டதன்று, அவர்கள் கணவன் மனைவியராக விரும்புகிறார்களோ என்று குரு கேட்கிறார். எல்லோரும் அவர்கள் கூறும் மறுமொழியை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இரு
வரும் “நான் விரும்புகிறேன்” என்று தனித்தனியே கூறுவார்கள். உடனே மணமகன் திருமண மோதிரத்தைப் பெண்ணின் இடது விரலில் அணிகின்றான். இந்திய மக்கள் தாலி தரிப்பது போன்றது அவர்கள் மோதிரம் தரிப்பது. பின்பு குருவால் திருமணப் பதிவுச் சீட்டு ஆசீர்வாதத்துடன் அவர்கள் கையில் அளிக்கப்படுகிறது. மணமகனும் மணமகளும் கோயிலுக்கு வெளியே வருதலும் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வர வேற்கப்படுவார்கள். பின்பு கலியாணக் கூட்டம் மணமகளின் வீட்டுக்குச் செல்லும். கலியாண விருந்து மிக மகிழ்வுக்குரியது. மிக நேர்த்தியானவும் உருகியுள்ளவுமான உணவுப் பொருள்கள் மது வகையும் பரிமாறப்படுகின் றன. “திருமண அப்பம்” (Wedding Cake) அவைகளுள் முக்கியமுடையது. மணமகள் அப்பத்தை வெட்டுவாள்; மணமகன் அவளிடம் கத்தியை எடுத்துக் கொடுப்பான். அப்பம் விருந்தினருக்குப் பரிமாறப்படுகின்றது. விருந்தினர் மணமகன் மணமகள் என்னும் இருவரின் உடல் நலன் நன்றா யிருக்க வேண்டுமென ஆசி கூறி அதனை உண்கின்றனர். விருந்துக்கு வராத நண்பர்களுக்கும் சுற்றத்தவர்களுக்கும் அப்பத்துண்டுகள் அனுப்பப் படுகின்றன. விருந்தினர் மது வகைகளைக் குடிக்கும் போதும் மணமகள தும் மணமகனதும் உடல்நலன் நன்றாயிருக்க வேண்டுமென்று சொல் வார்கள். குடிவகைகள் அருந்தும்போது சிறிய சொற்பொழிவுகளும் நடத்தப் படும். விருந்து முடிந்ததும் புதிய கணவனும் மனைவியும் “ஹனிமூனு”க்குப் புறப்படுவர். எல்லோரும் அவர்களைப் பார்த்து அவர்களுக்கு உலகில் எல்லா மகிழ்ச்சியும் நலனுமுண்டாக வேண்டுமென்று ஆசி கூறுவர்.
“ஹனிமூன்” மோட்டார் புறப்பட்டுச் செல்கின்றது. மகிழ்ச்சிச் சிரிப்பும் ஆரவாரமும் ஆகாயத்தில் ஓசையும் எழுகின்றன. மோட்டாரின் பின்புறத்தில் பழைய சப்பாத்தும் அதிட்டம் தரும் குதிரை இலாடமும் தொங்குகின்றன. இவை மிகப் பழங்காலச் சங்கதிகள்.
புதிய கணவன் மனைவியர் இயல்புடையவர்களாயின் ஹனிமூனை அயல்நாடுகளில் கொண்டாடுவர். வறியவர் தமது ஹனிமூனைத் தமது ஊரிலே அல்லது தமது வீட்டிலே கொண்டாடுவர். ஹனிமூன் மிக மகிழ்ச் சிக்கும் இன்பத்துக்கும் உரியதெனக் கொள்ளப்படுகின்றது. உண்மையில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் மணமக்களுக்கு அது இவ்வாறே உள்ளது. சில சமங்களில் ஹனிமூன் “கனியாத மூனாக” (Blue Moon) மாறி விடுவது முண்டு. திருமணச் செலவு பெரும்பாலும் மணமகனைப் பொறுத்தது. மணமகனுக்கு கொடுக்கும் கலியாண வெகுமதி, மணமகளின் உடை சம்பந்தமான சிறிய செலவுகளே பெண் வீட்டாரைப் பொறுத்தது.
இன்று பெண்கள் வேண்டுவது
1939இல் கூடிய பெண்கள் சபை1 ஒன்றில் இந்தியப் பெண்களின் சமூகநிலை எவ்வாறு இருத்தல் வேண்டுமென்பதைக் குறித்து நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கத்தை இங்குத் தருகின்றோம்.
1. பெண்களின் நிலை எல்லாவகையிலும் ஆண்களுக்குச் சமமா யிருத்தல் வேண்டும்.
2. பெண்கள் என்னும் காரணமாக அவர்களுக்கு எவ்வகை வேலை களும் மறுக்கப்படுதல் கூடாது.
3. பெண்கள் ஆண்களோடு சமமான சமூகப் பொருளாதார உரிமை களைப் பெற்று வாழ்வதற்குத் திருமணம் தடையாயிருத்தல் ஆகாது.
4. அரசாங்கம் பெண்ணையும் ஆணையும் சம உரிமையுள்ள அங்கத்தவர்களாகக் கொள்ளுதல் வேண்டும்.
பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும். ஆடவரைப்போல அவர் களும் உத்தியோகங்கள் பெற்று, ஆடவரைப்போல் ஊதியம் அடைதல் வேண்டும். வயதான பெண்களும் ஆண்களும் விரும்பினால் மணந்து கொள்வதற்குச் சாதி மதம் என்னும் கட்டுப்பாடுகள் இருத்தல் கூடாது. பெண்கள் பருவமடைவதன் முன் மணஞ் செய்துகொள்வதைச் சட்டம் தடைசெய்தல் வேண்டும். ஒரே காலத்தில் ஒருவன் ஒருத்தியையும், ஒருத்தி ஒருவனையும் மாத்திரம் மணம் செய்துகொள்ள வேண்டும். கலியாண நீக்க உரிமை இருத்தல் வேண்டும். திருமணங்கள் பதிவு செய்துகொள்ளும் நிலை யங்கள் கிராமங்கள்தோறும் இருத்தல் வேண்டும். கலியாண நீக்கம் இருவரில் எவர் விரும்பினாலும் செய்து கொள்ளலாம். ஆனால் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு என்பவைகளைப்பற்றிய ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப் படுதல் வேண்டும். விதவையாயிருப்பது கலியாணத்துக்கு தடையாதல் கூடாது. ஆடவரைப்போலப் பெண்களுக்குச் சொத்து உரிமையும் அவற்றை அவர்கள் வேண்டியபடி செய்யும் அதிகாரமும் வேண்டும். சிறுவரும் சிறுமியரும் கலந்து கல்வி பயிலும் கலவன் பாடசாலைகள் வேண்டும்.
இக்காலத் தாய்
முற்காலத்தில் தாயின் கடமை பிள்ளைகளைப் பெறுவது மாத்திரம் என்று கொள்ளப்பட்டது. அவள் பெறும் பிள்ளைகள் பெண்களாகவும், மனிதராகவும் எவ்வகையிலோ வளர்ந்து விடுவார்கள் என்னும் எண்ணம் அவர்களிடம் இருந்தது. தங்கள் குழந்தைகளை எவ்வாறு உருப்படுத்த வேண்டுமென்பது அவர்கள் மூளையிற்படவில்லை. இக்காலத் தாய் பழங் காலத் தாயிலும் பார்க்கச் சமூகப் பழக்கமுடையவள். இப்பொழுது அவள் தான் உலக கருமங்களில் கலந்துகொள்ளாது தனியேயிருக்கலாமென உணரவில்லை. அவள் தன்னைச் சுற்றியுள்ள உலக நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறாள். பிறந்தது முதல் குழந்தை எவ்வாறு பயிற்றப்படுகின் றதோ அவ்வாறாகவே அதன் பிற்கால வாழ்க்கையும் உருப்படுகின்றது. தாய் மாரையும் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் எழுதப்பட்ட பல புத்தகங்களை இக்காலத் தாய் படிக்கிறாள். தாய்மார்களையும் பிள்ளைகளையும் பற்றிய பல செய்திகள் தினமும் பேசப்படுகின்றன. இவ் விஷயங்கள் முற்காலத் தாய்மாருக்கு இடக்கராகத் தோன்றக்கூடியன. இவ்வகையான பேச்சுக்கள் தூய்மையற்றனவென்று இன்று கருதப்படுவதில்லை. இன்றைய நிலைமை தாயின் கடமை பிள்ளைகளைப் பெறுவது என்ற அளவில் இராது அவள் கடமை மனித சமூகத்தையே நல்வழியில் பழக்கி, வருங்கால உலகத்துக்கு நம்பிக்கை அளிப்பது என்று கருதப்படுகின்றது.